`தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி; நடிகர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள்!’ - நயன்தாரா!!

கொலையுதிர் காலம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி வைத்த விமர்சனமும், ராதாரவியைக் கண்டித்து விக்னேஷ் ஷிவன், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்ட பிரபலங்களின் விமர்சனங்களும் தி.மு.க-விலிருந்து ராதாரவி இடைநீக்கம் செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து தானே கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறியதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.


இதுகுறித்து, நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்

``வழக்கமாக நான் பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவதில்லை. என் வேலைகள்தான் எனக்காக பேசும் என்பதை திண்ணமாக நம்பும் நான். ஆணாதிக்க மன நிலையுள்ளவர்களால் சிக்கத்தவிக்கும் பெண்களுக்கான குரலாகவும் எனது நிலைப்பாட்டையும் தெரிவிக்கவே இந்த அறிக்கையை வெளியிடும் நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். சில கடுமையான நேரங்களில் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்துவரும் ராதாரவியைக் கண்டிக்கும் வகையில் அவர்மீது துரித நடவடிக்கையௌ மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முதலாவது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராதாரவிக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், பெண்கள் மீது பாலியல் ரீதியான கருத்துகள் கூறுவதோ, ஒரு பெண்ணின் தராதரத்தை குறைக்கும் வகையில் பேசுவதோ தங்களை ஆண் மகனாக்கி விடாது. பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் போது தங்களை ஈன்றெடுத்ததும் ஒரு பெண்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்படி ஒருவரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் நிலையை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.


அனுபவமிக்க ராதாரவி ஒரு மூத்த கலைஞராக அடுத்துவரும் தலைமுறை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்திருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கான துறைகளில் முன்னேறி சாதித்து வரும் காலம் இது. இந்த மாதிரியான நேரங்களில் ராதாரவி போன்ற ஆட்கள் தங்களின் லைம்டைட்டை தக்க வைத்துக்கொள்ள கீழ்த்தரமான வேலைகளைச் செய்து வருகின்றனர். இதில் என்னை மிகவும் வருத்தமடையச் செய்த விஷயம், ராதாரவியின் பேச்சுக்கு அங்கிருந்த சிலர் கொடுத்த கைதட்டலும் சிரிப்பும்தான். ராதாரவி போன்றவர்களின் இத்தகைய பேச்சையும் இரண்டாம் தர நகைச்சுவையையும் மக்கள் ரசிப்பதனால்தான் இவர்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக இப்படியான விஷயங்களைச் செய்கிறார்கள்.


மக்களிடமும் என்னுடைய ரசிகர்களிடமும் நான் வேண்டுவது யாதெனில், ராதாரவி போன்றவர்களின் பேச்சுகளை ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது. ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் என் மீது தனிப்பட்ட முறையில் விடுத்திருந்த அனைத்து கருத்துகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


இறைவனின் பேரருளால் எனது தொழில் வாய்ப்பையும், அன்பார்ந்த தமிழ்நாட்டின் சினிமா ரசிர்கர்களும், நல்ல நடிப்புக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. என் மீது வீசப்பட்ட அத்தனை எதிர்மறைக் கருத்துகளையும் ஒரு புறம் தள்ளி, நான் தொடர்ந்து சீதா, பேய், தெய்வம், மனைவி, காதலி, தோழி என எனக்கு வரும் கதாபாத்திரங்களில் எனது ரசிகர்களை மகிழிவிக்கும் விதத்தில் நான் நடித்துக்கொண்டே இருப்பேன்.

இறுதியாக, நடிகர் சங்கத்துக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்: ``உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க நடிகர் சங்கத்தில் உள்விவகார புகார் ஆணையத்தை நிறுவுவீர்களா? விஷாகா வரையறைபடி விசாரணையும் நடத்தப்படுமா?. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி. மீண்டும் என் பணியினை தொடர்கிறேன்’’ என நயன்தாரா குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.