ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய அரிய வகை சூரிய மீன்!

தெற்கு ஆஸ்திரேலிய கூரொங் (Coorong) தேசியப் பூங்காவுக்கு அருகிலுள்ள கடற்கரையில் சூரிய மீன் (Ocean Sun fish) ஒன்று இறந்த நிலையில், அங்கிருந்த மீனவர்கள் இருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மீன் பார்ப்பதற்கு விநோதமான பெரிய உருவமாக இருந்திருந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 1.8 மீட்டர் நீளமுள்ள அந்த மீன், கடல் சூரிய மீன் (Ocean Sunfish) வகையைச் சார்ந்தது என்று அடையாளம் கண்டுள்ளனர்.

இதைக் கண்ட மீன்பிடிக் குழு ஒன்றின் மேற்பார்வையாளர் மற்றும் மீனவரான ஸ்டீவன் ஜோன்ஸ் தனது முக நூலில் படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில் அவர், ``முதலில் அந்த மீனைப் பார்க்கும்போது மரத்துண்டு என்றுதான் நினைத்தேன். அதற்குப் பிறகுதான் சூரிய மீன் என அடையாளம் கண்டேன். இந்த மீனைக் கண்டது என் மீன்பிடி வாழ்க்கையிலேயே ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம்" எனத் தெரிவித்துள்ளார்.

``என் கணவர் பதிவிட்டிருந்ததைப் பார்த்தபோது முதலில் என்னால் நம்ப முடியவில்லை பொய் என்றுதான் நினைத்தேன். பல ஆண்டுகள் தன் கணவர் மீனவராக இருப்பதால் மீனை உடனடியாக அடையாளம் கண்டுவிட்டதாகவும் இதற்குமுன் சூரிய மீனை அவர் நேரடியாகப் பார்த்ததில்லை" என்றும் ஸ்டீவன் ஜோன்ஸ் மனைவி லினெட் கிரஸிலாக் தெரிவித்தார்.

இந்த வகையான மீன்கள் உலகெங்கிலுமுள்ள வெப்பமண்டலக் கடல்களில் காணப்படுகின்றன. குறிப்பாக ஆசியாவின் சில பகுதிகளான ஜப்பான், கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகளிலுள்ள கடல்களில் இவை காணப்படுகின்றன. இந்த மீன்கள் கடலில் பெரிய படகு மற்றும் கப்பல்களின் வருகையால் ஆபத்தை எதிர்கொள்வதாகக் கூறப்பட்டாலும், கடலில் தேங்கக்கூடிய நெகிழிப் பொருள்களை ஜெல்லி மீன்களென நினைத்து உண்பதால்தான் ஆபத்தான விளைவுகளைச் சந்திப்பதாக கூறப்படுகிறது. அந்தக் காரணத்தாலேயே இறந்த நிலையில் கரையொதுங்குவதாகப் பெரும்பாலான மீனவர்கள் கூறுகிறார்கள். இந்த வகையான மீன்கள், மனிதர்களுக்கு தீங்கு எதுவும் செய்யாதவை. தெற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் மீன் நிபுணர்களுடைய கருத்துப்படி, இந்தக் குறிப்பிட்ட இனங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் மிகவும் அரிதானவை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.