தர்ம கர்மாதிபதி யோகத்தில் 12 லக்னக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்! #Astrology

ஜோதிட சாஸ்திரத்தில், 'கஜகேசரி யோகம்', 'ராஜயோகம்', 'விபரீத ராஜயோகம்', 'தர்ம கர்மாதிபதி யோகம்' எனப்  பல வகையான யோகங்கள் இருக்கின்றன.

தர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன, அதனால் ஒரு ஜாதகருக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பது பற்றி, 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்யகுருஜி விவரமாகக் கூறினார். அவர் கூறிய விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...
ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்ட ஸ்தானங்களாக 1, 5, 9 - ம் வீடுகளையும், செயல் வீடுகளாக 1, 4, 7, 10 - ம் இடங்களையும் ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதிர்ஷ்ட ஸ்தானங்கள் திரிகோணம் என்றும், கர்மஸ்தானங்கள் எனப்படும் செயல் வீடுகள் கேந்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

திரிகோணம், கேந்திரம் இரண்டிலும் இடம்பெறும் ஒன்றாம் வீடுதான் லக்னம்.
முதல் வீடு எனப்படும் லக்னமும், அதன் அதிபதியான கிரகமும்தான் ஒருவரின்  சிந்தனை, செயல்பாட்டுத்திறன், அவர் எப்படிப்பட்டவர்? கோபக்காரரா, முட்டாளா, அறிவாளியா, கருணை உள்ளவரா, ஏமாற்றப் பிறந்தவரா என்பதையெல்லாம் நிர்ணயிக்கிறது.
அதிர்ஷ்டமும், செயலும் இணைந்தால்தான் வெற்றி எனும் கருத்தில் முதல் வீடாகிய லக்னம் திரிகோணத்திலும், கேந்திரத்திலும் இணைக்கப்பட்டு, இரண்டுக்கும் பொதுவானதாக வைக்கப்பட்டுள்ளது.

லக்னத்துக்குத் துணைபுரியும் முதன்மையான அதிர்ஷ்ட மற்றும் செயல் வீடுகளாக, திரிகோணங்களில் பெரிய பாவமான  அதிர்ஷ்டம் ஒன்பதாம் வீடாகவும், கேந்திரங்களில் பெரிய வீடான, செயல் பத்தாம் வீடாகவும் அமைகின்றன.
இதில் ஒன்பதாம் பாவம் தர்ம ஸ்தானம் எனவும், பத்தாம் பாவம் கர்ம ஸ்தானம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த இரு வீடுகளின் அதிபதிகளாக வரும் கிரகங்களே தர்ம,கர்மாதிபதிகள் என அழைக்கப் படுகிறார்கள்.

இந்த இரண்டு வீட்டு அதிபதி கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோ, ஒருவருடன் மற்றவர் இணைந்தோ, ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்ந்தோ, வேறு எந்த வகையிலேனும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது அல்லது இருவரும் பலம் பெறுவது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும் மிகச் சிறந்த யோகமாகும்.

தர்ம, கர்மாதிபதி யோகம் உள்ள ஜாதகம், சிறந்த ஜாதகமாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அந்த ஜாதகர் இப் பிறப்பில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார்.

இந்த யோகத்தில் சம்பந்தப்பட்ட கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் போன்ற வலிமை பெற்று, அல்லது நட்பு வீடுகளில் நல்ல இடங்களில் அமர்ந்து, பகை, நீசம், அஸ்தங்கம் போன்று வலிமை குன்றாமல், ராகு,கேதுக்களுடன் சேராமல், சுபத்துவமாகவும் இருக்க வேண்டும்.
இனி ஒவ்வொரு லக்னத்துக்கும் தர்ம, கர்மாதிபதிகள் யார்? அவர்கள் எப்படி, எந்த இடங்களில் இருந்தால் இந்த யோகத்தை முழுமையாகப் பெற முடியும் என்பதைப் பார்ப்போம்.



மேஷம் :
மேஷ லக்னத்துக்கு தர்ம, கர்மாதிபதிகள், குருவும் சனியும் ஆவார் கள்.   இந்த லக்னத்துக்கு சனியும், குருவும் ஒன்பது பத்தாமிடங்களில் பரிவர்த்தனை அடைவது நல்லதல்ல.
இந்த அமைப்பில் ஒன்பதாம் அதிபதி குரு 10-ல் மகரத்தில் நீசம் பெறுவார் என்பதால் யோகம் கிடைக்காது. மேலும் மேஷத்துக்கு சனி பாதகாதிபதியும் ஆவார். அதைவிட இருவரும் தனித்தனியே ஒன்பது, பத்தாமிடங்களில் முறையே குரு தனுசிலும், சனி மகரத்திலும் ஆட்சி பெற்று அமர்வது நல்ல யோகத்தைத் தரும்

ரிஷபம் :
பன்னிரண்டு லக்னங்களில் ரிஷபத்துக்கு மட்டும் தர்ம கர்மாதிபதி யோக அமைப்பு கிடையாது. யோகம் என்பதற்கு இணைவு அல்லது சேர்க்கை என்று அர்த்தம். இரண்டு கிரகங்கள் இணைவதே யோகம். ஆனால் ரிஷபத்துக்கு ஒன்பது, பத்தாமிடங்களுக்கு சனி ஒருவரே அதிபதியாக வருவதால் இந்த யோகம் கிடையாது.
ஆயினும் ரிஷபத்துக்கு சனி, புதனுடன் மட்டும் கூடி (சுக்கிரனுடன் சேராமல்) நல்ல இடங்களில் சூட்சும வலுப் பெற்று, பலவீனம் அடையாமல், மகரம் தவிர்த்து மிதுனம், கன்னி, கும்பம், ஆகிய இடங்களில் பகைவர் பார்வை பெறாமல் அமர்வாரேயானால், சனி தசை 19 வருடமும், அதனையடுத்து வரும் புதன்தசை 17 வருடமுமாக மொத்தம் 36 வருடங்கள் தர்மகர்மாதிபதி யோகத்துக்கு இணையான யோகம் கிடைக்கும்.

மிதுனம் :
மிதுனத்துக்கு தர்மகர்மாதிபதிகள் சனியும், குருவுமே ஆவார்கள். மிதுன லக்னத்துக்கு குரு பாதகாதிபதியாகவும், சனி அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால்  இந்த யோகம் சற்றுக் குறைவான பலன்களையே தரும். இந்த லக்னத்திற்கு குருவும், சனியும் ஒன்பது, பத்தாமிடங்களில் பரிவர்த்தனையாகி  இருப்பது நல்லது.
மிதுன லக்னக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதிகளான குரு, சனியின் தசைகள் 35 வருடங்களுள் ஏதாவது ஒரு தசைதான் நல்ல யோகம் செய்யும். ஒன்று யோகம் செய்தால், இன்னொன்று யோக பலன்களைத் தராது.

கடகம் :
தர்மகர்மாதிபதி யோகத்தை முழுமையாக அனுபவிக்கும் இன்னொரு லக்னம் கடகம் ஆகும். இந்த லக்னத்துக்கு ஒன்பது, பத்தாமிட அதிபதிகளான குருவும், செவ்வாயும் நண்பர்கள் என்பதால் யோகம் முழுமையாகக் கிடைக்கும்.
மூன்று, ஒன்பது, நான்கு, பத்து ஆகிய இடங்களில் மூன்றில் சனி ஒன்பதில் குரு அல்லது நான்கில் சனி ஒன்பதில் குரு என்று அமர்ந்து 7-ம் பார்வையாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது நல்ல யோகம். ஐந்தில் குரு இருந்து, செவ்வாய் ஏழில் உச்சம் பெறுவதும் நல்ல அமைப்பு. இதுபோன்ற நிலையில் குரு தனது ஒன்பதாம் வீட்டையும் லக்னத்தையும் பார்ப்பார். செவ்வாய் தனது பத்தாம் வீட்டையும் லக்னத்தையும் பார்ப்பார்.
நிறைவாக, கடகத்துக்கு ஒன்பது, பத்தாமிடங்களில் இருவரும் தனித்தனியே ஆட்சி பெறுவதைக் காட்டிலும், இருவரும் தங்களின் வீடுகளை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை ஆவார்களேயானால் அது உன்னதமான யோகமாக அமையும்.

சிம்மம் :
சிம்ம லக்னக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகள் செவ்வாயும், சுக்கிரனும் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பதால் சில மூல நூல்கள் சிம்ம லக்னத்துக்கு இந்த யோகம் சிறப்பாக செயல்படாது எனக் குறிப்பிடுகின்றன.
பொதுவாகவே, எந்த லக்னமாயினும் சுக்கிரனைச் செவ்வாய் பார்ப்பதோ அல்லது சுக்கிரனும், செவ்வாயும் இணைவதோ நல்லதல்ல. ஏனெனில் சுக்கிரன் ஒரு நல்ல  காரகத்துவங்கள் உள்ள இயற்கைச் சுப கிரகம். அவரை ஒரு பாபர் பார்ப்பதும், அவருடன் இணைவதும் சுக்கிரனின் நல்ல இயல்புகளைக் கெடுக்கும்.
கன்னி :
கன்னி லக்னக்காரர்களுக்கு ஒன்பது, பத்துக்குடையவர்களான சுக்கிரனும், புதனும் நண்பர்கள் என்பதால் முழுமையான தர்ம கர்மாதிபதியோகம் கிடைக்கும்.
கன்னிக்கு, லக்னாதிபதி புதனே பத்துக்குடையவனாகவும், அவருடைய நண்பர் சுக்கிரனே ஒன்பதுக்குடையவனாகவும் அமைவார்கள். மேலும் சுக்கிரனே கன்னிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கும் அதிபதி ஆவார். இவர்கள் இருவரும் சூரியனுடன் சேராமல் ஒன்பதாமிடமான ரிஷபத்தில் இணைந்தோ, அல்லது ரிஷபம் மிதுனத்தில் பரிவர்த்தனை பெற்றோ (சூரியனுடன் சேராமல்) இருப்பது பூரண தர்ம கர்மாதிபதி யோகம்.
கன்னி லக்னத்தவர்களுக்கு புதன், சுக்கிரனோடு, கேதுவும் நல்ல இடங்களில் சுபத்துவம் பெற்று அமைந்திருந்தால், புதன்தசை 17 வருடம், அதனையடுத்து கேது தசை 7 வருடம், அதன்பின் சுக்கிர தசை 20 வருடம் என 44 வருடங்கள் பிரமாதமான தர்ம கர்மாதிபதி யோகத்தை அனுபவிப்பார்கள்.

துலாம் :
துலாம் லக்னக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகள் புதனும், சந்திரனும் ஆவார்கள். ஜோதிட விசித்திரமாக, சந்திரனுக்கு புதன் சமம். ஆனால் புதனுக்கு சந்திரன் எதிரி. லக்னாதிபதி சுக்கிரனுக்கும் எதிரி.
சந்திரன் கடகத்தில் இருந்து மகரத்திலிருக்கும் புதனைப் பார்ப்பது விசேஷம். இருவரும் 9, 10 ஆகிய இடங்களில் பரிவர்த்தனை ஆவது இருவரின் தசைக்கும் சிறப்பு.
மூன்றில் சந்திரன் அமர்ந்து ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதும், நான்கில் புதன் அமர்ந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதும் யோகத்தை உருவாக்கி இருவரின் தசைகளிலும் சிறப்பான பலன்களைத் தரும். இருவரும் மேற்சொன்ன இடங்களில் தனித்திருப்பதே நல்லது.
விருச்சிகம் :
தர்ம கர்மாதிபதியோகத்தின் பலனை முழுமையாக அனுபவிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் விருச்சிக லக்னக்காரர்கள் ஆவார்கள். ஏனெனில் விருச்சிக லக்னத்தின் தர்ம கர்மாதிபதிகள் சூரியன், சந்திரன் இருவருமே லக்னாதிபதி செவ்வாய்க்கு அதி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருச்சிக லக்னத்தில் பிறந்து சூரியனும், சந்திரனும் பரிவர்த்தனையாவது மிகவும் சிறப்பாகும்.
விருச்சிக லக்னத்தில் சந்திரன் நீசமடைவார். சூரியன் பன்னிரண்டாமிடமான துலாத்தில் நீசமடைவார். இந்த இரு நிலைகளைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சூரிய, சந்திரர்கள் நேரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து (பௌர்ணமி யோகம்) தசை நடத்தினாலும், பிரமாதமான தர்மகர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள்.

தனுசு :
தனுசு லக்னத்துக்கு சூரியனும், புதனும் தர்மகர்மாதிபதிகளாக அமைவார்கள். இதில் ஒன்பதுக்குடைய சூரியன் லக்னாதிபதி குருவுக்கு நண்பராவார். பத்துக்குடைய புதனும், குருவும் தங்களுக்குள் நண்பர்கள் இல்லை. விதிவிலக்காக சூரியனும், புதனும் நண்பர்கள். அதிலும் புதனுக்கு, சூரியன் சிறந்த நண்பர். எனவே தனுசுக்கு தர்மகர்மாதிபதி யோகம் நன்றாகவே பலன் அளிக்கும். இருவரும் ஒன்பது, பத்தாமிடங்களில் தனித் தனியே ஆட்சி பெறாமல் பரிவர்த்தனை பெறுவது நல்லது.
தனுசுக்கு சுக்கிரன் கொடிய பாவி என்பதால் சூரியன், புதனுடன், சுக்கிரன் இணைந்தால் தர்மகர்மாதிபதியோகம் பங்கமடைந்துவிடும். எந்த இடத்திலும் இவர்களுடன் சுக்கிரன் இணையக் கூடாது.
மகரம் :
மகர லக்னக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதிகள் புதனும் சுக்கிரனும் ஆவார்கள். இருவருமே லக்னாதிபதி சனிக்கு நண்பர்கள் என்பதால் இந்த யோகம் சிறப்பாகச் செயல்படும். புதனுக்கு ஆறாமிட ஆதிபத்தியம் இருந்தாலும், அவரின் மூலத்திரிகோண ஸ்தானம் கன்னி என்பதால், அவருக்கு பாக்கியஸ்தானத்தின் அமைப்பே மேலோங்கி நிற்கும்.
மகர லக்னக்காரர்களுக்கு லக்னாதிபதியான சனியே இரண்டாமிடமான கும்பத்திற்கும் நாயகனாகி தனாதிபதியுமாவதால் சனி நல்ல இடங்களில் அமர்ந்து சூட்சும வலுப் பெற்று, கேது மூன்றாமிடமான மீனத்திலோ, ஆறாமிடமான மிதுனத்திலோ, பதினோராமிடமான விருச்சிகத்திலோ சுப பலம் பெற்று இருப்பது நல்லது.
கும்பம் :
கும்ப லக்னக்காரர்களுக்கு முதலிலேயே ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். எந்த ஒரு யோகமுமே கும்பத்துக்கு முழுமையாக அமையாது. இது ஒரு கால புருஷத் தத்துவம். ஏனெனில் நவ கிரகங்களில் யாருமே கும்பத்துக்கு முழுயோகராக மாட்டார்கள்.
கும்ப லக்னத்துக்கு தர்ம கர்மாதிபதிகள் சுக்கிரனும் செவ்வாயும் ஆவார்கள். இதில் சுக்கிரன் இந்த லக்னத்துக்கு பாதகாதிபதியாகவும், செவ்வாய் இந்த லக்னத்தின் அதிபதி சனி மற்றும் சுக்கிரனுக்கும் எதிரியாகவும் அமைவதால் இந்த யோகம் முழுமையாகப் பலன் தராது.
மீனம் :
மீன லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த லக்னத்தின் தர்மகர்மாதிபதிகளான செவ்வாயும், குருவும் தங்களுக்குள் நண்பர்கள் என்பதாலும், இருவரும் இந்த லக்னத்துக்கு லக்னாதிபதி மற்றும் தனாதிபதியும் ஆவார்கள் என்பதாலும் இந்த யோகம் வலுப்பெற்று ஜாதகருக்கு  நன்மைகளைச் செய்யும்.

லக்னத்தில் குரு ஆட்சி பெற்று, ஒன்பதாமிட செவ்வாயைப் பார்ப்பது மற்றும் இரண்டு, பத்தாமிடங்களில் இருவரும் பரிவத்தனை பெற்று, குரு தனுசில் இருக்கும் செவ்வாயைப் பார்ப்பது ஆகியவையும் தர்ம கர்மாதிபதியோகத்தைத் தரும் சிறப்பான அமைப்புகள்தான்.
இந்த லக்னத்தின் இன்னொரு யோகாதிபதியான சந்திரன், வளர்பிறை நிலையில் பலமான இடங்களில் அமர்ந்து குருவையும், செவ்வாயையும் பார்ப்பது அல்லது இவர்களுடன் இணைவது யோகத்தை மேலும் வலுப்படுத்தும்.

நிறைவாக மீன லக்னக்காரர்களுக்கு ராகு சுபபலம் பெற்று சுப இடங்களில் அமர்ந்திருப்பின், சந்திர தசை பத்து வருடங்கள், செவ்வாய் ஏழு, ராகு பதினெட்டு வருடங்கள், குரு பதினாறு வருடங்கள் என மொத்தம் ஐம்பத்தியொரு வருடங்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது உறுதி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.