இங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி... மீட்கப்படுமா?

ஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய தொல்லியல் பொருள்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டன.
இங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி... மீட்கப்படுமா?
திப்புசுல்தானுக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற கடைசிப் போர் `ஸ்ரீரங்கப்பட்டினம் போர்.’ இது இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த போராகும். இந்தப் போரில்தான் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். ஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய தொல்லியல் பொருள்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. அவை, இன்று இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏலம் விடப்பட இருக்கின்றன. இந்த ஏலத்தின் ஆரம்பகட்ட மதிப்பே, ஒரு மில்லியன் பவுண்ட்க்கும் (சுமார் 9.12 கோடி) மேலிருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஏலம் தடுக்கப்பட்டு, இந்த அரிய கலைப்பொருள்கள் அனைத்தும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுமா என்ற ஆவல் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தின் முக்கிய மாகாணங்களில் ஒன்று பெர்க்‌ஷைர் (Berkshire). பெர்க்‌ஷைரைச் சேர்ந்த தம்பதியர், தமது பழைமையான வீட்டின் பரணைச் சுத்தம் செய்தபோது, திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கவசத்தாலான வாள், தீக்கல்லியக்கத் துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய கலைப் பொருள்களைக் கண்டெடுத்தனர். இந்த அரிய கலைப் பொருள்கள் அனைத்தும் பல்வேறு தலைமுறையினரைக் கடந்து 220 ஆண்டுகளுக்குப் பிறகு பரணிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தும் மேஜர் தாமஸ் ஹார்ட் என்பவர் மூலம் ஸ்ரீரங்கப்பட்டினம் போர் நடைபெற்ற இடத்திலிருந்து இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டவை. பெர்க்‌ஷைர் தம்பதியர் இந்தக் கலைப் பொருள்களை நிதி திரட்டும் நோக்கில் ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர் (Antony Cribb Arms & Armour Auctions)  எனப்படும் ஏலம் விடும் நிறுவனத்திடம் அளித்தார்கள். இந்த நிறுவனம் இன்று (26.3.2019) இக்கலைப்பொருள்களை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறது. இந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்த இந்தியத் தூதரகம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர், பழம்பெருமை வாய்ந்த போர்க் கருவிகளையும், தளவாடங்களையும் ஏலம் விடும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்டனி கிரிப், “பெர்க்‌ஷைர் தம்பதியினர் நிதி திரட்டும் நோக்கில் இவற்றை ஏலம் விடவில்லை. இந்தக் கலைப் பொருள்களை அருங்காட்சியகத்துக்கோ அல்லது இந்தியாவுக்கோ திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதற்காகவே இதைப் பொதுவெளியில் ஏலம் விடுகிறோம்” என்றும் தெரிவித்தார். 

இதுகுறித்து `இந்தியா பிரைட் புராஜக்ட்' அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார், “220 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஸ்ரீரங்கப்பட்டினப் போரில் திப்பு சுல்தானிடம் இருந்த இந்த அரிய கலைப் பொருள்கள் எப்படி மேஜர் தாமஸ் ஹார்டிடம் சென்றது என்று அவர்களிடம் ஒரு ஆவணம்கூட இல்லை. `எங்களுக்குப் பரணைச் சுத்தம் செய்தபோது இந்த கலைப்பொருள்கள் கிடைத்தன’ என்று ஏலம் விடும் ஆண்டனி க்ரிப் விஜயகுமார்ஆர்ம்ஸ் & ஆர்மர் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார்கள் பெர்க்‌ஷைர் தம்பதியர். இவற்றைப் பரிசோதனை செய்த ஏலம் விடும் நிறுவனம், `இந்தப் பொருள்கள் அனைத்தும் மில்லியன் பவுண்ட்ஸ் கணக்கில் ஏலம் போகும்’ என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பொருள்கள் ஏலத்துக்கு வருவதை அறிந்ததும், நான் இங்கிலாந்தில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தேன். இந்திய தூதரகம், ‘மைசூர் திப்பு சுல்தானுக்கு உரிய இந்தத் தொல்லியல் பொருள்களைச் சோதனை செய்துகொண்டு இருக்கிறோம். இவை திருடப்பட்டதா அல்லது வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்டதா என்பது உறுதி செய்யப்படும் வரை ஏலத்தை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று ஏலம் விடும் ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர்கள் எந்தப் பதிலும் இதுவரை கூறவில்லை.

ஆனால், இன்று (26.3.2019) திட்டமிட்டபடி இந்தக் கலைப் பொருள்கள் ஏலம் நடைபெறும் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. போர் வெற்றிச் சின்னமாக இவை கொண்டுவரப்பட்டிருந்தால் இங்கிலாந்து ராணியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படிக் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் போரில் இறந்த எத்தியோப்பிய மன்னர் ஒருவரின் மகுடம் இங்கிலாந்திலிருந்து திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அதே போன்று ஆவணம் இல்லாத இந்தத் தொல்லியல் பொருள்களும் இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டும். அதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்...” என்றார்.

ஏலத்துக்கு வரும் ஒரு வாளில், ஹைதர் அலியின் சின்னம் தங்கத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்ற வாள்கள் அனைத்தும் தங்கக் கைப்பிடியால் செய்யப்பட்டிருக்கின்றன. துப்பாக்கி, போர் முனையில், கிழக்கிந்தியக் கம்பெனியின் படையைக் கடைசி வரை எதிர்த்து நின்ற மாவீரன் பயன்படுத்தியதாக இருக்கலாம். 2014-ம் ஆண்டு, திப்பு சுல்தானின் தங்க மோதிரம் 1,45,000 பவுண்ட்களுக்கு கிறிஸ்டீஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. 2016-ல் நடைபெற்ற மற்றொரு ஏலத்தில் 6 மில்லியன் பவுண்ட்களுக்கு திப்புவின் மேலும் சில கலைப் பொருள்கள் ஏலம் போனது.

இன்று நடைபெறும் ஏலத்தில், இந்த அரிய கலைப் பொருள்களும் விற்கப்பட்டுவிட்டால் இவற்றை மீட்பதென்பது இயலாத காரியமாகிவிடும். அதனால் ஏலம் விடுவதற்கு முன்பே இந்த அரிய கலைப் பொருள்கள் மீட்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.