ஷங்கருக்குக் கடிவாளம் போட்ட லைகா!!

இந்திய சினிமாவில் தமிழ் சினிமா முகமாக பிரபலமானவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய படங்களின் திரைக்கதையை காட்டிலும் அப்படத்தின் பிரம்மாண்டம் முன்னிறுத்தப்படும். இவரது இயக்கத்தில் வெளியான படங்களின் மூலம் பிரம்மாண்டமான லாபத்தை இதுவரை தயாரிப்பாளர்கள் பெற்றதில்லை.
ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன் படம் தொடங்கி கடந்த வருடம் வெளியான 2.0 வரை படத்தின் பட்ஜெட் பற்றி தயாரிப்பாளருக்கு ஷங்கர் கூறியது இல்லை. படம் முதல் பிரதி முடியும்போதுதான் மொத்த பட்ஜெட் எவ்வளவு என்பது தெரியும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் படப்பிடிப்பு செலவுகளை கட்டுபடுத்த சன் தொலைக்காட்சி சக்சேனா தலையிட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பை சில மணி நேரம் நிறுத்தினார் ஷங்கர். கலாநிதி மாறன் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்ட பின் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு கொடுத்த பட்ஜெட்டிற்குள் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் ஷங்கர்.
கடந்த வருடம் லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான 2.0 திட்டமிட்டதைக் காட்டிலும் மும்மடங்கு செலவு ஆனதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தை ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ஆம் தேதி சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த ஷங்கர் கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருக்கிறது, அதனால் அதைச் சரி செய்து படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினார். இந்தக் காரணம் உண்மை என்றாலும், படப்பிடிப்பு தொடங்கியவுடன் நிறுத்தியதோடு, கமலின் ஒப்பனை உட்பட கூடுதலாக செலவு பிடிக்கும் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் கேட்டவுடன் உஷாராகியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
2.0 படத்தில் ஷங்கர் மூலம் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இந்தியன் 2 படத்தை என்ன பட்ஜெட்டுக்குள் எடுத்து முடிப்பேன் என்றும், அதற்கு மேல் செலவானால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றும் ஒரு ஒப்பந்த நகலைத் தயாரித்து ஷங்கருக்கு அனுப்பியது தயாரிப்பு தரப்பு. இதில் கையெழுத்துப் போட்டால் படப்பிடிப்பை நடத்துவோம் இல்லையென்றால் இப்படியே போய்விடலாம் என்று கறாராக தயாரிப்பு நிறுவனம் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன ஷங்கர் சில நாட்கள் யோசனைக்குப் பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
13 படங்கள் வரை தயாரிப்பாளர்களை தன் இஷ்டத்துக்கு செலவு செய்ய வைத்த ஷங்கரை 14ஆவது படத்தில் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் படத்தின் பட்ஜெட்டை கொண்டு வந்திருக்கிறது லைகா நிறுவனம் என்கிறது திரையுலக வட்டாரம்.
Powered by Blogger.