தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன்?: கனிமொழி!!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். இந்நிலையில் தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை எதிர்த்துப் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.


 இதற்கிடையில் அவர் தூத்துக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தூத்துக்குடி தொகுதி முன்னேறுவதற்காகவும், தொழில் வளர்ச்சி பெறுவதற்காகவும் முயற்சிகளை எடுப்பேன் என்று கூறி வரும் கனிமொழி, தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்துத் தெரிவித்துள்ளார்.


 இது குறித்து ட்விட்டரில் நேற்று (மார்ச் 26) அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”5 ஆண்டுகளுக்கு முன்பு பிரதம மந்திரி கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் நான் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய வெங்கடேசபுரம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தேன். அதன் பிறகு என்னுடைய எம்.பி. நிதியிலிருந்து பல திட்டங்களுக்கு நிதியை அளித்திருக்கிறேன். தொடர்ந்து இங்கே வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றதாலும் இங்கு கிராமசபைக் கூட்டங்களுக்கும், ஊராட்சி கூட்டங்களுக்கும் வரக்கூடிய வாய்ப்பை திமுக அளித்ததாலும், இங்கு இருக்கக் கூடிய சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இங்கே பல வாய்ப்புகள் இருக்கிறது.


ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழலை அதிமுக அரசு உருவாக்கியிருக்கிறது. கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தொழில் வளர்ச்சி இல்லை. வேலைவாய்ப்பு இல்லை என்பதைக் கண் கூடாகப் பார்க்க முடிகிறது.

அதனால் இந்த பகுதிகளுக்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு, வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தொகுதியைத் தேர்வு செய்தேன். இங்கு போட்டியிட வாய்ப்பு அளித்த திமுகவுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.