டிடியின் தெலுங்கு என்ட்ரி!

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தடம் பதிக்க உள்ளார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்துவருகிறார்.
பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்துவைக்கிறார்.
டிடி தற்போது தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ்பூரி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது. இந்தத் தகவலை டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்த நிலையில் சார்மி அதை பகிர்ந்துள்ளார். ‘டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை மக்கள் பார்க்க இனியும் காத்திருக்கமுடியாது” என்று சார்மி தெரிவித்துள்ளார்.
இவருக்கு, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்வருகிறது.

No comments

Powered by Blogger.