ஜெயலலிதா கதாபாத்திரம் சிக்கலானது!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தலைவி’ படம் உருவாகவுள்ளது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகியுள்ளார். 2008ஆம் ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் கதாநாயகியாக கங்கனா ரணாவத் நடித்திருந்தார். அதன்பிறகு தலைவி படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் வருகிறார்.
இப்படத்திற்கு கதை எழுத விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே விஜயேந்திர பிரசாத் கதை எழுதிய பாகுபலி போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தலைவி படத்திற்கு கதை எழுதுவது சவாலான பணியாக இருக்கும் என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டெக்கன் க்ரானிக்கள் ஊடகத்திடம் பேசுகையில், “ஜெயலலிதாவின் வாழ்வில் அதிர்ச்சிக்குரிய பல்வேறு பகுதிகள் உள்ளன. எந்தெந்த பகுதிகளை கதையில் சேர்ப்பது என்பதை தீர்மானிப்பது மிகவும் சவாலாக இருக்கும்.
உண்மையான தகவல்கள் மட்டுமே கதைக்குள் வருவதை நான் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஜெயலலிதாவின் ரசிகர்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள். படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை காட்சிப்படுத்துவது மிகவும் சிக்கலான வேலையாக இருக்கும். ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை பலரும் படமாக்க முயற்சித்து வருவதால், எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.