திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் எங்கே?

தூத்துக்குடியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த இயக்குனர் கவுதமன், திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் குறித்து ஏன் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவந்த இயக்குனர் வ.கவுதமன், கடந்த மாதம் தமிழ்ப் பேரரசு என்னும் கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 26) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற கவுதமன், ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே திமுக சார்பில் கலைஞரின் மகளும் திமுகவின் மகளிரணி தலைவருமான கனிமொழியும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரடியாக களம் காண்பதால் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ள தூத்துக்குடி, வ.கவுதமனின் வருகையால் மேலும் கவனம் பெற்றுள்ளது. வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன், “தூத்துக்குடியில் போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், அதனை எதிர்த்து சென்னையில் போராடினோம். தூத்துக்குடி கொடூரத்தை ஐ.நா சபை வரை கொண்டு சென்று பேசினேன். அதனடிப்படையில் இப்பகுதி மக்கள் என்னை தூத்துக்குடியில் போட்டியிடக் கோரினர். அதனால் களஆய்வு செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மண் காக்கும் போராட்டம்தான் இந்த மக்களவைத் தேர்தல். வரும் தலைமுறையினருக்கு நல்ல நிலம், நீர், காற்று, சுற்றுச் சூழல் ஆகியவற்றை கையளிக்க வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறேன். மக்களின் வேட்பாளராக போட்டியிடும் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, “இந்த மண்ணை அழிக்க ஸ்டெர்லைட் ஆலையை கொண்டுவந்தவர்களும், திறந்துவைத்தவர்களும், மக்களை சுட்டுக்கொன்றவர்களும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்டுவருகிறார்கள்” என்று விமர்சித்த கவுதமன், இங்கு போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஸ்டெர்லைட் குறித்து ஒரு இடத்தில் கூட ஏன் பேசவில்லை என்ற கேள்வியை தமிழ் மக்கள் மனதில் எழுப்புகிறேன். ஸ்டெர்லைட் தூப்பாக்கிச் சூட்டின் தகிப்பு இன்னும் தீரவில்லை, ரத்தக் கரைகளும் காயவில்லை. ஆனால் ஸ்டெர்லைட் குறித்து ஒரு கட்சி கூட தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியாக எதனையும் கூறவில்லை. ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருந்தாலும் ஆளுபவர்களும், ஆண்டுகொண்டிருப்பவர்களும் சொல்லவில்லை என்பது மிகப்பெரிய வலியைத் தருகிறது என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.