புதுச்சேரி: சபாநாயகர் வீடு அருகே கொலை!
இன்று அதிகாலையில் புதுச்சேரி சபாநாயகர் வீட்டின் அருகே ஒரு பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம் மடுகரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி பெயர் கங்கா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ராஜசேகர் தனியார் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். மடுகரையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கங்கா வேலை பார்த்து வந்தார். கங்காவின் சொந்த ஊர் மடுகரை அருகேயுள்ள பட்டாம்பாக்கம் வாழைப்பட்டு ஆகும். ராஜசேகரும் கங்காவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர், ராஜசேகரின் சொந்த ஊரான சொர்ணாவூரில் வசித்து வந்தனர்.
இரண்டு ஆண்டுகளாக, இவர்கள் இருவரிடையே பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கருத்து வேறுபாடு அளவு கடந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மடுகரையில் தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்தார் கங்கா. அவ்வப்போது ராஜசேகர் தனது குழந்தைகளைப் பார்க்க வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 1) அதிகாலை 5.30 மணியளவில் பால் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்குச் சென்றார் கங்கா. கடையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில், அவருடன் 2 வாலிபர்கள் பேசியபடி வந்துள்ளனர். திடீரென்று, அவர்கள் கங்காவின் கழுத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கங்கா, சில நொடிகளில் உயிரிழந்தார்.
அங்கிருந்த மக்கள் இது குறித்து உடனடியாக மடுகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார், சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி ராஜசேகரிடம் விசாரணை செய்தனர். தூங்கி எழுந்த நிலையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டு ராஜசேகரும் அவரது குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்தனர். கணவன் மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்ததால், இந்த கொலை பற்றி ராஜசேகரிடம் விசாரணை நடைபெறுகிறது.
கங்காவிடம் பேசிய இரண்டு வாலிபர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர் மடுகரை போலீசார். இந்த கொலை நடந்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் தான் புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வைத்திலிங்கத்தின் பூர்விக வீடு உள்ளது
கருத்துகள் இல்லை