திமுக எந்த மதத்துக்கும் எதிரானதல்ல: ஸ்டாலின்!
திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 67ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கலைஞர் மறைவை அடுத்து வரும் முதல் பிறந்தநாள் என்பதால் பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் கட்சித் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது ட்விட்டர் பதிவில் உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, “சுயமரியாதை - சமூகநீதி - சகோதரத்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கின்ற இலட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள். 'உங்கள் சகோதரனின் குரல்'' என்று பிறந்தநாளன்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட வீடியோவில், சுயநலனுக்காகவும், பதவி ஆதாயத்துக்காகவும் இன்றைய ஆட்சியாளர்கள் மத்தியில் ஆளும் பாஜகவிடம் மண்டியிட்டு, கையேந்துகிற பரிதாப நிலை தமிழகத்தில் உள்ளது. எனவே சுய மரியாதையை மீட்டெடுத்துக் கரை துடைக்கும் கடமை நமக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“திமுக மீது களங்கம் சுமத்த விரும்பியவர்கள். குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரானவர்கள் என்று பொய் பரப்பினார்கள். நம் சகோதரத்துவம் மற்றவர்களை பொறாமை கொள்ளச் செய்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கு மட்டுமே திமுக பரம்பரை எதிரி. திமுக எந்த ஒரு தனி மனிதனுக்கோ, மதத்திற்கோ, சமூகத்திற்கோ எதிரானதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை