பெத்தவங்களை நல்லா பார்த்துக்கணும்னு வெறித்தனமா உழைக்கிறதுக்கு பெண் குழந்தைகளால முடியும்!! பாண்டியன் ஸ்ரோர்ஸ் முல்லை!!

மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாய் வளர்ச்சியடைந்திருக்கிறார் சித்ரா.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர், 'ஜோடி' டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் பகிர்ந்துகொண்டவை.

''எங்க வீட்டுலேயே நான்தான் கடைக்குட்டி. என் அண்ணனும், என் அக்காவும் என்னைவிட ரொம்ப வயசு மூத்தவங்க. எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது இன்னொரு குழந்தை வேண்டாம்னு மருந்துலாம் சாப்பிட்டாங்களாம். ஆனாலும், எல்லாத்தையும் எதிர்த்து நான் பிறந்துட்டேன். எங்க பரம்பரையிலேயே முதல் தலைமுறை டிகிரி படிச்சது நான் மட்டும் தான். அதுவும் முதுகலைப் பட்டம் வரைக்கும் படிச்சிருக்கேன். அதுமட்டுமில்லாமல், யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்ன்னு எல்லா இடத்துலேயும் பெருமையா சொல்லுவேன். என்னை மீடியாவுக்கு அனுப்பவே மாட்டேன்னு சொன்னாங்க. நான் மீடியாக்குள்ளே வந்ததே ஒரு ஆக்ஸிடெண்ட்ல தாங்க!" புன்னகைக்குப் பின்னர் தொடர்ந்தார்.

"விஜய் டிவியில் 'நண்பன்' இன்டர்வியூ ஃபங்ஷன் நடந்துச்சு. நான் விஜய் சாரோட தீவிர ரசிகை. அந்த சமயம் நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். விஜய் வர்றார்னு என் ஃப்ரெண்ட்ஸெலாம் சொன்னதும் நானும் அவரைப் பார்க்கலாங்குற ஆசையில் தான் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். அந்த நிகழ்ச்சியை கோபிநாத் சார்தான் இன்டர்வியூ பண்ணாங்க. அங்கே போனப்போ ஒரு பிரேம்லயாச்சும் நம்ம மூஞ்சை காட்ட மாட்டாங்களான்னு ஏக்கமா இருந்துச்சு. இப்போ அந்த இடத்துலேயே நான் நிற்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. அதுக்கப்புறம்தான் எனக்கு மக்கள் டிவியில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு கிடைச்ச வாய்ப்பை முழுசா பயன்படுத்துக்கிட்டேன்'' என்றவரிடம் மீடியாவுக்குள்ளே நுழையும்போது வீட்டுல எதிர்ப்பு தெரிவிக்கலையான்னு கேட்க சிரிக்கிறார்.

''ஆரம்பத்துல வீட்டுல சொல்லவே இல்ல. எங்க வீட்டுல மக்கள் டிவி வைக்கவே விடமாட்டேன். அவங்களுக்குத் தெரியாம தான் பண்ணிட்டு இருந்தேன். அவங்களுக்குத் தெரிஞ்சதுக்கு அப்புறம் கோபப்பட்டாங்க... சமாளிச்சிட்டேன். இப்போ அவங்களே என்ஜாய் பண்றாங்க. பொண்ணுங்களுக்கு மீடியா பாதுகாப்பு இல்லைங்குறது அவங்களுடைய எண்ணம். மீடியாதான் பொண்ணுக்கு பாதுகாப்புன்னு இப்போ தெரிஞ்சுகிட்டாங்க. என்னைப் பார்த்துட்டு எங்க ஃபேமிலியிலுள்ளவங்க அவங்களுடைய பசங்களையும் மீடியாவுக்கு அனுப்புறாங்க. நான் எல்லோருக்கும் ரோல் மாடலா இருக்கேன்னு நினைக்கும்போது நிஜமாகவே செம்ம ஹாப்பி!'' என்றவரின் எமோஷனல் பக்கங்கள் வலிமிகுந்தது! அதனைப் பகிர்ந்தார்.

''நாங்க ஆரம்பத்துல குடிசை வீட்டுல தான் இருந்தோம். அதுக்கப்புறம் குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுத்தாங்க. அந்த வீடு பெட்டி சைஸ்ல தான் இருக்கும். எனக்குன்னு தனி பெட்ரூம் வசதியெல்லாம் கிடையாது. நான் காலேஜ் படிக்கும்போது என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குலாம் போகும்போது அவங்களுடைய பெட்ரூம்ல உட்கார்ந்து கதை பேசியிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்கன்னா கொஞ்சம் சங்கடமா இருக்கும். ஆரம்பத்திலிருந்தே எனக்காக என் அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களை ராஜா, ராணி மாதிரி பார்த்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. ரொம்ப ஹார்ட்ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். கிடைக்கிற பணத்தை குருவி சேர்க்கிற மாதிரி சேத்து வைச்சேன். எந்த ஈவண்ட்டிற்கு கூப்பிட்டாலும் பேசப் போயிடுவேன். இது சின்ன நிகழ்ச்சி நாம இப்போ ஹீரோயின் இங்கெல்லாம் போகக்கூடாதுன்னுலாம் யோசிக்க மாட்டேன். ராத்திரி. பகலா வேலைப் பார்த்து காசு சேமிச்சேன். முதல்ல சொந்தமா கார் வாங்கினேன். அந்த காரிலேயே மதுரை வரைக்கும் கூட டிரைவ் பண்ணிட்டு ஈவண்ட் பண்ணப் போயிருக்கேன். டிரைவர் வெச்சா காசு செலவாகும். நாமே ஓட்டிட்டுப் போயிடலாம்னுலாம் சிக்கனமா இருந்துருக்கேன். இப்படி மூணு வருஷம் சேமிச்சு இப்போ எங்க அம்மா, அப்பாவுக்காக ஒரு வீடுகட்டிக் கொடுத்திருக்கேன்.

தனி வீடா இருந்தா அவங்க மட்டும்தான் இருக்க முடியும். அவங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே இரண்டு சின்ன வீடு கட்டினேன். அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு அவங்க உட்கார்ந்து சாப்பிட வழி ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ என்னைப் பெண் பிள்ளையா பெத்ததுக்கு என் அம்மாவும், அப்பாவும் பெருமைப்பட்டுட்டு இருக்காங்க.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா, அப்பாவுடைய முப்பத்தி ஐந்தாவது திருமண நாள் வந்துச்சு. இதுவரை அவங்க திருமண நாளைக் கொண்டாடினதே இல்ல. அவங்களை சர்ப்ரைஸ் பண்ணனும்னு நினைச்சேன். என் அம்மாவுக்கு தங்கக் கொலுசு, தங்கக் கம்மல் எங்க அப்பாவுக்கு தங்க மோதிரம் வாங்கினேன். என் அப்பா அம்மாவுக்கு கொலுசையும், கம்மலையும் போட்டுவிட்டாங்க. அம்மா, அப்பாவுக்கு மோதிரம் போட்டுவிட்டாங்க. அதைப் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அன்னைக்கு என்னை பெத்தவங்க முகத்துல பார்த்த அந்த சந்தோஷத்துக்கு எதை மாற்றாக் கொடுத்தாலும் ஈடாகாது!

இந்தச் சமூகத்துல பெண் குழந்தை வேண்டாம்னு நினைக்கிறவங்க கவனத்துக்கு, பெண் குழந்தைன்னால எதுவும் முடியாதுன்னு நினைக்காதீங்க.. பெத்தவங்களை நல்லா பார்த்துக்கணும்னு வெறித்தனமா உழைக்கிறதுக்கு பெண் குழந்தைகளால முடியும். நானே அதுக்கு எக்ஸாம்பிள். நிறைய பெண்கள் இதே மாதிரி அவங்களுடைய கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் உழைச்சிட்டு இருக்காங்க'' என்றார் பெருமிதமாக!

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

என்ற பாரதியின் வரிகள் நினைவில் வந்து சென்றன..!

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.