முறிந்த கால்க் கதிரையும் தமிழர் போராட்டங்களும்!

ஐ. நா. கூட்டத்தொடர் காலங்களில் ஜெனீவா செல்லும் நேரங்களில் எல்லாம் இந்த ஒற்றை கால் முறிந்த கதிரையை அண்ணாந்து பார்ப்பேன்! அது தமிழர் எம் போராட்டங்களை நினைவூட்டுவதாக நினைப்பேன்!


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான முக்கியமான விவாதம் இடம்பெறவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் உயரதிகாரி அறிக்கை இன்று பேரவையில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடு பற்றி உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற், அறிக்கையின் ஊடாக அறிவித்திருந்தார்.
 
இந்த அறிக்கை பற்றி இலங்கை அரசாங்கத்தின் பதில் இன்று வழங்கப்படும். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பேரவையில் பதிலளித்து உரையாற்றுவார். அத்துடன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இன்றைய அமர்வின் போது தமது கருத்துக்களை வெளியிடுவார்கள்.

இந்நிலையில் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மூன்று விடயங்களை உள்ளடங்கி, ஆறு தமிழ் கட்சிகளின் தலைவர்களால், கைச்சாத்திடப்பட்ட  அறிக்கையொன்று  நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கையளிக்கப்பட்டுள்ளது.
 
"இலங்கை விவகாரத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும், சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்பட வேண்டும், 30 -1 மற்றும் 34- 1 ஆகிய தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐ.நா. ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவதுடன் அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும்!" என்று இந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நடைபெற்று   10 ஆண்டுகளாகியும் இன்னமும் தமிழினத்திற்கு நீதி கிடைக்காத நிலையில் ஐ. நா. வின் 40 வது கூட்டத்தொடர் மிக முக்கியமாக தமிழ் மக்களால் பார்க்கபடுகின்றது.

இதனிடையே ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, ஜெனிவாவில் நின்று செயல்படும்  தமிழ் தரப்புக்களை ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் அரச சார்பு சிந்தனையாளர்களை தமிழர்கள் என கூறி இணைக்க முடியாது என்பதும் மறுக்க முடியாத ஒன்றே.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கே.சுகாஸ் ஆகியோரும் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களும் தற்போது ஜெனிவாவில் நின்று செயலாற்றுகின்றார்கள்.
 
எனினும், இவர்களிற்குள் ஒருங்கிணைந்த தன்மை ஏற்படாத நிலையில், தனித்தனியாகவே செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் தரப்பினரை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை ஜெனிவாவிலுள்ள சில தனிநபர்கள் ஆரம்பித்துள்ளனர். இது குறித்து கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனிடையே, உலகத் தமிழர் பேரவையினரும் இம்முறை ஜெனிவாவில் தமிழ் தரப்புக்களுடன் இணைந்து கொண்டு செயற்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தமிழர் பேரவையினரை விடுத்து ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதில் எந்த சிக்கலுமிருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தென்னிலங்கையிலிருந்து சென்றுள்ள சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தொடர்பாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கான முயற்சிகளில், இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஜெனிவா சென்றுள்ள அரச தரப்பு பிரதிநிதிகளான வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் நேற்று பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் விருந்துபசாரம் ஒன்றுக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இதன்போதே பிரேரணையில் திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

யார் என்ன சொன்னாலும் மக்களாக உலக தமிழ் மக்கள் மட்டுமன்றி தாயகத்தில் உள்ள வடகிழக்கு வாழ் தமிழர்களும் நீதி வேண்டியே போராடுகின்றோம் என்பதை யாழிலும் மட்டக்களப்பிலும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் மக்கள்  பேரணியும் வலுவாக சர்வதேசத்திற்கு  எடுத்து சொல்லி இருக்கின்றது.

கால் முறிந்தாலும் நிமிர்ந்து நிற்கும் கதிரை போல் நாமும் ... போராட்டங்கள் தொடரட்டும்!

எமது விதியை  நாமே எழுதுவோம்!
-பி.சிவவதனி-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.