உங்கள் பார்ட்னர் பெயர் கேட்டதும் உள்ளுணர்வு எப்படி இருக்கிறது?!

உங்கள் பார்ட்னர் பெயர் கேட்டதும், உங்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கிறது? புன்னகையன்றி வேறு எந்த ஓர் உணர்வு ஏற்பட்டாலும், அவர்களிடமிருந்து விலகிவர முயற்சி செய்யுங்கள்.

எந்த உறவாக இருந்தாலும், இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. புரிதல் இல்லாமல் அவை எல்லை மீறிப் போகும்போது, தீவிர பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் உணர்வதேயில்லை. ஓர் உறவில் எதிர்மறை உணர்வுகள் அதிகமாக இருந்தால், நிச்சயம் அது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும். பலரின் உறவுகள் பாதியிலேயே முறிவதற்குக் காரணமாக இருப்பது, பிரச்னைகளை அறிந்து, புரிந்து, அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியைக் குறைக்க முயலாமல் இருப்பதுதான். ஆனால், ஒரே பிரச்னை திரும்பத்திரும்ப உங்கள் நிம்மதியை அழித்தால், அந்த உறவில் ஒட்டிக்கொண்டிருப்பது நிச்சயம் நல்லதேயில்லை. அதுபோன்ற சிக்கல்கள் என்னவென்பதைப் பார்ப்போம்.

ஒருதலைக் காதல்:

தற்போதைய காலகட்டத்தில், காதலில் விழவைப்பதில் எடுக்கும் முயற்சியில் சிறிதளவுகூட, பிரச்னையைச் சரிசெய்வதில் எடுப்பதில்லை. சிறியளவு சிக்கல் என்றாலும், 'பிரேக் அப்' என்ற வார்த்தையை எளிதில் சொல்லிவிடுகிறார்கள். கோபம், கருத்து வேறுபாடு போன்ற எதிர்மறை உணர்வுகள் உறவுகளில் வருவது சகஜம்தான். ஆனால், இதுபோன்ற சமயங்களில் எப்போதும் ஒருவர் மட்டுமே மற்றொருவர் பின்செல்வது, ஒருவர் மட்டுமே மன்னிப்புக் கேட்பது போன்ற ஒருதலை செயல்கள் அதிகமாக இருந்தால், நிச்சயம் அது ஆரோக்கியமான உறவல்ல. அதுவும் ஒருதலைக் காதல்தான். இருவரின் வேற்றுமைகளைப் புரிந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதே ஆரோக்கியமான உறவு.

பாராட்டுகள் இல்லையா!

ஒரு நிலையிலிருந்து அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல மனிதர்களை ஊக்கப்படுத்தும் மருந்து, பாராட்டு. இது, நல்ல உறவைத் தக்கவைப்பதற்கும் அத்தியாவசியம். சின்னச் சின்ன விஷயங்களிலும் பாராட்டுகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இந்த அற்ப மனது, பல நேரங்களில் ஏமாற்றங்களை மட்டுமே பரிசாய் பெரும். ஆனால், உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு, எந்தவொரு பாராட்டும் கிடைக்கவில்லையென்றால், கருத்துவேறுபாடுகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. இது கவனச்சிதறலின் அறிகுறியே. சிலருக்கு இயல்பிலேயே பாராட்டத் தெரியாது. ஏமாற்றங்கள் என்றைக்குமே பிரச்னைகளை அதிகரிக்கத்தானே செய்யும். இதைப் புரிந்து செயல்படுவது சிறந்தது.

பதற்றமா?
உங்கள் பார்ட்னர் பெயர் கேட்டதும், உங்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கிறது? புன்னகையன்றி வேறு எந்த ஓர் உணர்வு ஏற்பட்டாலும், அவர்களிடமிருந்து விலகிவர முயற்சி செய்யுங்கள். முக்கியமாகப் பதற்றம் அதிகமானால், நிச்சயம் அது பல ஆபத்துகளைச் சந்திக்கவிருக்கும் உறவாகத்தான் இருக்கும். இது ஒருவிதமான 'எமோஷனல் பிளாக்மெயிலின்' வெளிப்பாடு. இதிலிருந்து வெளியே வருவதே சிறந்தது. எந்த உறவாக இருந்தாலும், உங்களை அடுத்தகட்டத்துக்குக் கடத்திச் செல்வது அன்பும், அது கொடுக்கும் புன்னகை மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பிக்கையே இல்லை!

குழந்தை, தன் பெற்றோர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் இவ்வுலகின் அதிகபட்ச நம்பிக்கையாக இருக்க முடியும். அதற்கு வேறு எந்த உறவும் ஈடில்லை. அதுபோன்ற நம்பிக்கை ஒருவரால் கொடுக்க முடியுமென்றால், அந்த உறவைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த நவீன காலத்தில் உறவுகளுக்கிடையில் பிரிவு ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று சந்தேகம்தான். சிறிதளவு நம்பிக்கையின்மை ஏற்பட்டாலே, அந்த உறவின் முறிவு காலம் ஆரம்பம். சரியான புரிதல் இல்லாமலும், புரிய வைக்க முயற்சி செய்தும் பலனில்லாமலும் போனால், யோசிக்காமல் அந்த உறவை விட்டு விலகுவது, பெரிய மன உளைச்சலிலிருந்து காப்பாற்றும்.

விமர்சகரா?

ஆரோக்கியமான உறவில் என்றைக்கும், கட்டாயப்படுத்துதலோ, விமர்சனங்களோ இருக்காது. திருத்தங்கள் சொல்ல வேண்டுமென்றாலும், தன் அன்பானவர்களிடம் எப்படிச் சொன்னால் அவர்கள் மனம் புண்படாமல் இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்றபடி சொல்லுவார்கள். ஆனால், உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு, உங்களை விமர்சித்தாலோ, கட்டாயப்படுத்தினாலோ, அவர்களிடமிருந்து உடனே வெளியே வருவதுதான் நல்லது. நிச்சயம் அவர்களின் உலகத்தில் நீங்கள் இல்லை என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்கள் உறவில் நீண்ட காலமாக இருந்தாலும்கூட, உங்கள் பார்ட்னரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். தீர்வு கிடைக்காமல், அதே கூண்டுக்குள் அடைபட்டு இருப்பதுபோல் உணர்ந்தால் நிச்சயம் இங்கு 'பிரிவு நல்லது'.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“No comments

Powered by Blogger.