திருப்பதிக்கு அருகே ஒரு டூர் ஸ்பாட்... !!


தலகோனாவுக்கு அருகில் இருக்கும் வெங்கடேஷ்வரா நேஷனல் பார்க்
தமிழகத்துக்கு மேற்குத்தொடர்ச்சி மலை என்றால், ஆந்திராவுக்கு கிழக்குத்தொடர்ச்சி மலை. கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சேஷாச்சல காட்டில் இருப்பதுதான் தலகோனா அருவி. அண்ணாநகரில் இருந்து காலையில் இட்லிகளை விழுங்கிவிட்டு காரை விரட்டினால், 30 நிமிடத்தில் செங்குன்றம் தாண்டி IOC பெட்ரோல் பங்க் தொட்டிருப்பீர்கள். இடதுபுறம் திரும்பி பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர், நாகலாபுரம் வழியாக மதியம் சித்தூர் சேர்ந்துவிடலாம்.
தலகோனா போவதற்கு முன்பு கயிலாசகோனாவைப் பார்த்துவிட வேண்டும். சித்தூர் - திருப்பதி ரூட்டில் செல்லும்போது சூரியகாந்தி தோட்டம் வரும். அங்கு பூக்களோடு சில போட்டோ, பிறகு ஒரு வெல்கம் ஸ்டேட்டஸ்... 10 நிமிடத்தில் கயிலாசகோனாவின் வாசல் வந்திருக்கும். பார்க்கிங் வசதி உண்டு. பைக்கில் செல்பவர்கள் குரங்குகளிடம் பொருள்களைப் பறிகொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
கைலாசகோனா அருவி
தலகோனா போகும் வழியில் இருக்கும் அருவி கயிலாசகோனா. அழகான இந்தப் பெயரை `கோனே ஃபால்ஸ்' என்று மாற்றிய மகராசரைத்தான் ஆந்திரா அண்ணையாக்கள் தேடுகிறார்கள். `வெயிலில் ஆந்திர அருவிகள் வறண்டுபோயிருக்குமே!’ என்று லாஜிக்கலாக யோசிக்கலாம். ஆனால், உங்களை லாஜிக்கில் ஓட்டையைப் போட்டு பறக்கவிடுகிறது இயற்கை. இந்தியாவில், முரட்டு வறட்சியிலும் தண்ணீர் வற்றாத அருவிகளில் கயிலாசகோனாவும் ஒன்று. தண்ணீர் வற்றாது... ஆனால், தண்ணீர் மிகக் குறைவாகும் சமயங்கள் உண்டு. ஆர்ப்பரிக்கும் அருவி விரும்பிகள் `நீலு பாகுந்தி’ என்றால் மட்டும் கோனேவில் கால் வையுங்கள். கயிலாசகோனாவில் ஆன்மிக விரும்பிகளுக்கு சிவன் கோயிலும், அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு ட்ரெக்கிங் ஸ்பாட்டும் உண்டு. ஆபத்தில்லாத அம்சமான ட்ரெக்கிங்.
கயிலாசகோனாவில் குளியல் ஆட்டம் போட்டுவிட்டுக் கிளம்பினால், அடுத்த ஸ்டாப் திருப்பதி. தலகோனாவில் 5 மணிக்குமேல் அனுமதியில்லை. அதனால், திருப்பதி சென்று ரூம் எடுத்துத் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலையில் கிளம்புவதுதான் சிறப்பு. இரண்டு நபர்களுக்கு 400 முதல் 1,500 ரூபாய் வரை விலையுள்ள தங்கும் விடுதிகள் உள்ளன. ஓயோ போன்ற ஆப் பயன்படுத்தி முன்பதிவுசெய்தால், குறைவான விலையில் காலை உணவுடன் சுத்தமான ரூம் பிடித்திடலாம். திருப்பதி கோயிலின் பின்பக்கமாக இறங்கினால் அருவிகளும் குளங்களும் உள்ளன. பாபவினாசம் ஏரியும் உள்ளது. ஏழு குண்டலவாடாவுக்கு கோவிந்தா போட்ட கையோடு, இந்த ஏரியில் ஒரு குளியல் போடலாம். முதலைகளிடம் மட்டும் உஷார். 
கைலாசகோனா பாதை
திருப்பதியிலிருந்து சென்னை அனந்தாபுரி நெடுஞ்சாலையைப் பிடித்து, பக்காரபேட்டை - தலகோனா சாலையில் 60 கி.மீ தொலைவு சென்றால், அருவியை அடையாளம். வழியில் காட்டுப் பாதையைக் கடந்து ஊருக்குள் சென்று மீண்டும் காட்டுக்குள் வருவீர்கள். அடர்ந்த காடு கிடையாது. புல்வெளிகள்தான். இந்தக் காட்டில் புலியும் சிங்கமும் வாழ்கின்றன. இரவில் கரடிகளும் காட்டெருமைகளும் லன்ச் சாப்பிட நாம் பயணிக்கும் சாலையை அவ்வப்போது கடக்குமாம். கீரிகளிடம் மட்டும் கேர்புல். எந்த நேரத்திலும் வரும்.
கைலாசகோனா
செக்போஸ்ட்டில் எல்லா வாகனங்களையும் சோதித்துப்பார்ப்பார்கள். அவரவர் பொருள்களுக்கு அவரவர்தான் பொறுப்பு. மது பாட்டில்களுக்கு, கட்டாயம் அனுமதி கிடையாது. தலகோனாவில் ஆந்திரா அரசின் ரிசார்ட் உள்ளது. ஏ.சி கிடையாது. இரண்டு நபர்களுக்கு ஒரு குடில். 5,000 ரூபாய் ரூமில் 10 பேர் தங்கலாம். உணவு அங்கேயே சமைத்துத் தருகிறார்கள். தலகோனாவுக்கு பார்க்கிங், என்ட்ரி டிக்கெட் என எதுவும் கிடையாது. மிகவும் கரடுமுரடான சாலை. காரில் செல்பவர்கள் தரைதட்டாமல் பார்த்து ஓட்ட வேண்டும்.
தலகோனா பாதை
சாலை முடியும் இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். 240 மீட்டர் தூரமும் 40 அடி உயரமும் நடக்க வேண்டும். பெரிய பெரிய அகலமான படிக்கட்டுகள் உண்டு. அருவி மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். கீழ்ப் பகுதியில் நீர்த்தொட்டி அமைத்திருப்பார்கள். சின்ன குழந்தைகள் ஸ்விம்மிங் செய்ய அருமையான இடம். மேலே சென்றால் சின்ன அருவி இருக்கிறது. அங்கிருந்து மேலே பார்த்தால் பெரிய அருவி தெரியும். மேலே செல்பவர்கள்தான் 50 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் அருவியின் உற்சாகத்தையும் சித்தர் குகையையும் பார்க்க முடியும். தலகோனா தண்ணீர், பல மூலிகைகளைத் தொட்டுவருகிறதாம்.
தலகோனா நீர்வீழ்ச்சி
நீர் மெல்லிதாக வந்தாலும் செம போர்ஸ். சில்லென்ற தண்ணீரில் நின்றால் அருவியே நமக்கு மசாஜ் செய்து களைப்பைப் போக்கிவிடும். அருவிநீர் நகர்ந்துகொண்டே இருக்கும். கொஞ்ச நேரம் நம் தலையில் விழும், கொஞ்ச நேரம் அருகில் இருப்பவர் தலையில் விழும். எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறது தலகோனா அருவி. இங்கேயும் ட்ரெக்கிங் உண்டு. ஆந்திராவில் `நோ என்ட்ரி’ எனப் போட்டிருந்தால் அந்த இடம் அழகாக இருக்கும் என அர்த்தம். அழகு இருக்கும் அளவுக்கு ஆபத்தும் இருக்கும். லோக்கல் கைடு யாராவது இருந்தால் அழைத்துக்கொண்டு 270 அடி உயரத்துக்கு டிரெக்கிங் சென்று மலையின் இன்னொரு முகத்தைப் பார்க்கலாம்.
தலகோனா
தலகோனா மலையில் ஜங்கில் சஃபாரி உண்டு. 8 பேர் போகக்கூடிய பெரிய வேன் ஒன்றில் நம்மைக் காட்டுக்குள் கூட்டிப்போவர்கள். அதிர்ஷ்டம் இருந்தால் சிங்கம், புலியைப் பார்க்கலாம். கருஞ்சிறுத்தை கேஷுவலாக வாக்கிங் போகுமாம். சாதா சிறுத்தையும் உண்டு. மான், ஹைனா, காட்டெருமை போன்றோரும் இங்கு வசிக்கிறார்கள்.
``புலியைப் பார்த்தீர்களா?’’ என வன அதிகாரியிடம் கேட்டோம். ``போனவாரம்கூட ஒருத்தரை அடிச்சித் தூக்கிட்டுப் போயிடுச்சு’’ என்று திகில் கிளப்பினார். காட்டில் யானை மட்டும் ``மன்ச்சு லேது’’ என்றார். இந்த சஃபாரிக்கு 4,000 ரூபாய். காலை 6 முதல் 9 வரை. மாலை 3.30 முதல் 5.30 மணி வரை காட்டில் சுற்றிவரலாம்.
கோடை காலத்தில் தலக்கோனாவில் தண்ணீர் ரொம்பவே குறைவு
செம்மரங்களும் சந்தனமரங்களும் நிறைந்த காடு இது. தேவாங்கு இங்கே அதிகம். வெள்ளைக் கழுகு, பச்சை நிற புறா, மஞ்சள் தொண்டைச் சின்னான் (Yellow-throated Bulbul), ஸ்கிமிட்டார் பாப்லர் போன்ற அறிய வகை பறவைகளை இங்கு பார்க்கலாம். பறவைகள் புகைப்படக்காரர்களுக்கு ஏற்ற இடம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.