கருணாஸ் ஈழ ஆதரவு உணர்வு நகைச்சுவை அல்ல.!!

கருணாஸ் இவர் நகைச்சுவை நடிகர்தான் - ஆனால் இவருடைய ஈழ ஆதரவு உணர்வு நகைச்சுவை அல்ல.

கருணாஸ் ஒரு நகைச்சுவை நடிகர்தான். ஆனாலும் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும்கூட.

அவர் ஜெனிவா வந்து ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தமையை சில ஈழத் தமிழர்கள் கிண்டல் செய்கின்றனர்.

அடுத்தமுறை பரோட்டா சூரியை அல்லது யோகிபாபுவை அழைத்து வரப் போகின்றீர்களா என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

தமக்கு ஆதரவு தெரிவிப்போரின் பல்லை பிடுங்கி பார்க்கும் ஒரு இனம் உண்டு என்றால் அது ஈழத் தமிழினம் மட்டும்தான்.

கடலில் தத்தளிக்கிறோம். ஒரு துரும்பாவது கிடைக்காதா கரை சேர என என ஏங்குகிறோம்.

இந்த நிலையில் யார் வந்து ஆதரவு தெரிவித்தாலும் அதனை நன்றியுடன் ஏற்பதுதானே புத்திசாலித்தனம்.

கருணாஸ் பொறுத்தவரையில் அவருடைய ஈழ ஆதரவு என்பது அவர் அரசியலுக்கு வரும் முன்னரே இருந்து வருகிறது.

அவர் பல ஈழ அகதிகளுக்கு விளம்பரம் இன்றி பல உதவிகளை செய்திருக்கிறார்.

பாஜக தலைவி தமிழிசை யாழ்ப்பாணம் வந்தபோது காணாமல் போனவர்களின் உறவுகளை சந்திக்கவே மறுத்து விட்டார்.

ஆனால் கருணாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்ததும் இல்லாமல் தான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என அவர்களிடம் உறுதியளித்தார்.

அதன்படி இப்போது ஜெனிவா வந்து ஜ.நா வில் காணாமல்போனவர்களின் உறவுகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு குரல் கொடுப்பதால் அவருக்கு ஒரு ஐந்து வோட்டுகூட அதிகமாக விழப்போவதில்லை.

இருப்பினும் அவர் உண்மையான ஈழ ஆதரவு உணர்வோடு வந்து குரல் கொடுத்திருக்கிறார்.

ஒரு அரசியல்வாதியாக அவருக்கு இந்த ஈழ ஆதரவு என்பது  எந்த பயனும் தரப்போவதில்லை.

அவர் ஜ.நா வில் குரல் கொடுப்பதால் காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்று சந்தேகம் கொள்ளலாம்.

ஆனால் அவருடைய ஈழ ஆதரவு உணர்வு என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

அதுமட்டுமல்ல இன்று ஈழத் தமிழருக்கு ஒரு நல்ல தலைமை இல்லை. அதனால்தான் அவரவர் தமக்கு தெரிந்த வழியில் சாத்தியமான போராட்டங்களை நடத்துகின்றனர்.

அதன் ஒரு அம்சமே கருணாஸ் அவர்களையும் சிலர் அழைத்திருப்பது.

எனவே இன்று எமக்கு தேவை ஒரு நல்ல தலைமை. அது உருவானால் போராட்டங்கள் யாவும் ஒருமுகப்படுத்தி நடத்த முடியும்.

தலைமையை உருவாக்குவோம்.
ஆதரவு தருவோரை கிண்டல் செய்வதை தவிர்ப்போம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.