நான் மண்புழு; அவர் நச்சு வைரஸ்!: எடப்பாடி கே. பழனிசாமி!

விவசாயிகளின் நண்பன் நான், பயிரைத்தாக்கும் நச்சு வைரஸ் மு.க. ஸ்டாலின் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். ஆர். நடராஜனுக்கு ஆதரவாக ஆட்டோ ரிக்ஷா சின்னத்துக்கு வாக்குக்கேட்டு, மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்

கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
மக்கள் செல்வாக்கு, தொண்டர் பலம், வாக்கு வங்கி நிறைந்த கூட்டணியாக அதிமுக கூட்டணி விளங்கி வருகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் தேர்தல் அறிக்கையாக உள்ளது. காவிரி - கோதாவரி நதியை இணைப்போம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி உறுதியாக நிறைவேற்றியே தீருவோம். திமுக ஒவ்வொரு தேர்தலின்போது ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடும். அது அந்த தேர்தலுடன் காணாமல் போய்விடும். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் பதவியில் இருந்த திமுகவினர், தமிழக நலனுக்காக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.


மதவாத கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா என கேட்கும் திமுகவினர், 1999 -ஆம் ஆண்டு இதே பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது பாஜக மதவாத கட்சியாகத் தெரியவில்லையா ? சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக அதிமுக விளங்கி வருவதை, சிறுபான்மையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திமுக கூட்டணி ஈடுபட்டு வருகிறது.


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்னை மண் புழு என விமர்சித்து வருகிறார். விவசாயிகளின் நண்பனான மண்புழு விளை நிலத்தின் இயற்கை உரமாக விளங்கி பயிர்கள் செழிப்புடன் வளர்கிறது. பயிர்களுக்கு நான் இயற்கை உரமாக இருப்பது தவறில்லை, பெருமைப்படுகிறேன்.


ஆனால், பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் வயலில் பரவும் நச்சு வைரஸ் ஸ்டாலின். வைரஸ் தாக்குதலை பூச்சி மருந்து அடித்து விவசாயி பயிரை எப்படி காப்பாற்றுகிறாரோ, அதேபோல் நச்சு வைரஸ்களை தேர்தல் முடிவின் மூலம் தமிழகத்திலிருந்து வாக்காளர்கள் அகற்ற வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி. பிரசாரத்தின்போது, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், தஞ்சை மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


"மக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறது' திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணனுக்கு ஆதரவு கேட்டு நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:


வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீதிமன்றத்துக்கு சென்று தடை ஆணை பெற்றுள்ளார். மக்களுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருவது இதுபோன்ற செயல்களிலிருந்து தெளிவாகிறது. மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி தொடர நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும், அதற்கு அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.

முதல்வருடன், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், அதிமுக வேட்பாளர் தாழை. ம. சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக மன்னார்குடியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வலங்கைமான் செல்லும் வழியில் நீடாமங்கலத்தில் முதல்வருக்கு அதிமுகவினர் சால்வை அளித்து வரவேற்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.