வரவு- செலவு திட்டத்துக்கு சிறுபான்மைக்கட்சிகள் ஆதரவு!: நஸீர் அஹமட்!!


தேர்தலை நடத்துவதாக அரசு உறுதியளித்தால் மாத்திரமே வரவு- செலவு திட்டத்துக்கு ஆதரவை வழங்குவோமென சிறுபான்மைக்கட்சிகள் தெரிவிக்க வேண்டுமென கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து நஸீர் அஹமட், நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணங்களில் ஆளுநர் ஊடாக ஆட்சியை நடத்துவது ஜனநாயகச் செயற்பாடு அல்லவென நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அந்தவகையில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பது தொடர்பாகச் சிறுபான்மை கட்சிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்ற சிறுபான்மைக் கட்சிகளும் பிரதான எதிர்கட்சி ஜே.வி.பி உட்பட முக்கிய அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி இவ்விடயத்தில் அதிக கரிசனை காட்டியபோதும் தொடர்ச்சியாக காலதாமதம் ஏற்படுத்தப்படுகின்றது. சட்டத்திருத்தப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதன் ஊடாக பிரதமர் நினைத்தால், ஒரே நாளில் இதற்கான தீர்வைப்பெற முடியும். அந்தவகையில் தற்போதைய அரசு, தனது வரவு- செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் நிலையில், தமது ஆதரவை வழங்க முன்வரும் சிறுபான்மைக் கட்சிகள், மாகாணசபை தேர்தலை உடன் நடத்துவது தொடர்பில் அரசுடன் உடன்பாடு ஒன்றை செய்து கொண்டு ஆதரவு வழங்குவதே சிறந்தது” என நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.