பண பலத்தைத் தடுக்க தீவிரம் காட்டுங்கள் தேர்தல் ஆணையம் உத்தரவு!

பண பலத்தைத் தடுக்க தீவிரம் காட்ட வேண்டுமென தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அதிகாரிகள், அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பண பலம் தொடர்பாக ஏராளமான தகவல்கள் வரப்பெற்றுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்தார்.


இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா, தேர்தல் ஆணைய முதுநிலை துணை ஆணையர் உமேஷ் சின்ஹா, செலவின கண்காணிப்புப் பிரிவின் தலைவர் திலீப் சர்மா ஆகியோர் மூன்று நாள்கள் பயணமாக சென்னை வந்தனர். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அரசுத் துறை உயரதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். மூன்றாவது நாளான வியாழக்கிழமை அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தேர்தல் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். அரசியல் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளும், கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்க்கப்படும்.

சகித்துக் கொள்ள மாட்டோம்: தமிழகத்திலுள்ள வாக்காளர்கள் எந்தவித அச்ச உணர்வும், அழுத்தமும் இல்லாமல் எவ்வித கவர்ச்சிக்கும் மயங்காமல் தங்களது வாக்குகளைச் செலுத்துவதை மாநிலத்தின் அனைத்துப் பிரிவு தேர்தல் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் உறுதி செய்திட வேண்டும். இதற்காக ஒருங்கிணைந்த கூட்டு செயல் திட்டத்தை உருவாக்கிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அலட்சியமான முறையிலும், நேர்மையற்ற வகையிலும் பணியாற்றக் கூடிய அதிகாரிகள், அலுவலர்களை தேர்தல் ஆணையம் சகித்துக் கொள்ளாது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ரகசியமான முறையில் எந்தவித கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. தவறிழைக்கும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது தேர்தலுக்குப் பிறகும் கூட நடவடிக்கைகள் பாயக் கூடும்.
பண பலத்தைத் தடுக்க வேண்டும்: பண பலம் தொடர்பாக ஏராளமான தகவல்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்து கொண்டே இருக்கின்றன. எனவே, பண பலத்தைத் தடுக்க மிகத் தீவிரமான, வெளிப்படையான அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மதுபாட்டில்கள், இலவச பரிசுப் பொருள்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றின் புழக்கத்தை கருத்தில் கொண்டு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ள பறக்கும் படை வாகனங்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

தேர்தல் வழக்குகள்: சட்டம்-ஒழுங்கை பேணிக் காக்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை உயரதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவுக்கான சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கு விஷயங்களில் உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிணையில் வெளிவர முடியாத உத்தரவுகளைப் பிறப்பிக்கும் விஷயத்தில் கிடப்பிலுள்ளவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான நிலுவையிலுள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும். எங்கெல்லாம் கூடுதலாக மத்திய ராணுவப் படையினர் தேவையோ அங்கெல்லாம் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கலாம்.

சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்: வாக்காளர்களுக்கு மிகுந்த அச்ச உணர்வு ஏற்படும் பகுதிகளில் கூடுதலாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படி காவல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும், இணையதளம் மூலமாக படம் பிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அசோக் லவாசா.

4 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் எப்போது?

தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தும் விஷயம் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அதுகுறித்து முடிவு செய்து ஊடகங்களுக்கு அறிவிப்போம் என்று இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:-

ரஃபேல் புத்தக விவகாரம்: ரஃபேல் புத்தகம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டோம். இதுபோன்று விஷயங்களைத் தடுப்பதற்கு பறக்கும் படை போன்ற அமைப்புகளுக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை எனத் தெரிவித்தோம். இதைத் தொடர்ந்து, புத்தகத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னை தொடர்பான முழு அறிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இருந்து கோரியுள்ளோம். நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தும் விஷயம் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அதுகுறித்து முடிவு செய்து ஊடகங்களுக்கு அறிவிப்போம் என்றார்.

தமிழகத்தில் இதுவரை ரூ.127 கோடி பறிமுதல்
தமிழகத்தில் இதுவரை ரூ.127 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்தார்.
இது கடந்த தேர்தல்களைக் காட்டிலும் அதிகம்தான். ஆனாலும், பணத்தைப் பறிமுதல் செய்ய கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், சம்பந்தப்பட்ட நபர்களை குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் கையில் இல்லை. அது சம்பந்தப்பட்ட துறைகளிடமே உள்ளது.


இந்தியாவில் தேர்தல் நடத்துவது என்பதே சவாலாக உள்ளது. மிகப்பெரிய அளவில் தேர்தல் நடத்தப்படுகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ளன. 1.2 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் சிரமம் உள்ளது.
இதற்கு உதாரணமாக, வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைச் சொல்லலாம். தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்களை அம்பலப்படுத்த சி-விஜில் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தேர்தலில் அதிகார பலம் குறைந்துள்ளதாகவும், பண பலம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

நமோ தொலைக்காட்சி தொடக்கம்: நமோ தொலைக்காட்சி தொடக்கம் குறித்து புகார் வந்ததும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அறிக்கை கோரியுள்ளோம். வெள்ளிக்கிழமை (ஏப்.5) அந்த அறிக்கை கிடைக்கும் என்றார்.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா?

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா பதில் அளித்ததாவது:
தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படும் போது, அதுகுறித்த முதல்நிலை அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு, சட்டத்தை அமல்படுத்தும் முகமைகள் (வருமான வரித் துறை) மூலமாக, அந்தச் சோதனைகள் குறித்து தொடர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த முகமைகளே முழுமையான விசாரணையை மேற்கொள்ளும். முதல் நிலை அறிக்கைக்குப் பிறகு, வருமான வரித் துறை போன்ற சட்டத்தை அமல்படுத்தும் முகமைகள் தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை அளிக்கும்.
இந்த ஒருங்கிணைந்த விரிவான அறிக்கைகளின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமையும். வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்துவது குறித்து, வருமான வரித் துறை போன்ற முகமைகளின் முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே கூற முடியும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.