காவல் துறை வாகனத்தையும் சோதனையிடுங்கள்: ஸ்டாலின்!!

பொதுமக்கள் வாகனங்களை சோதனையிடுவது போல காவல் துறை வாகனத்தையும் பறக்கும் படையினர் சோதனையிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணி வீட்டின் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், அதையடுத்து பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பொள்ளாச்சி சம்பவத்தை குறிப்பிட்டு உருக்கமாக பேசிய ஸ்டாலின், “மற்ற தொகுதிகளுக்கு செல்லும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வும் பொள்ளாச்சி தொகுதியில் இருக்கும்போது எனக்கு ஏற்படும் உணர்வும் வேறு வேறு. ஆயிரம் பிரச்சினைகளைப் பற்றி பேசும்போது வராத மனத் துன்பம், பொள்ளாச்சி விவகாரத்தைப் பற்றி பேசும்போது ஏற்படுகிறது. நானும் ஒரு மகளுக்கு தந்தையாக இருக்கக் கூடியவன். அதனால்தான் எனக்கு அந்த வருத்தம் மேலோங்கி நிற்கிறது” என்று தெரிவித்து,
பொள்ளாச்சி விவகாரத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. அதிமுக ஆட்சியின் மீது எவ்வளவோ புகார்கள் உள்ளன. பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட ஆட்சியின் மீது குறைகண்டுபிடிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பூதக் கண்ணாடியெல்லாம் தேவையில்லை வெறும் கண்ணே போதும். எனவே பொள்ளாச்சி விவகாரத்தை சொல்லித்தான் ஓட்டுக் கேட்க வேண்டும் என்பது எங்களுக்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை அவர்கள் யாராக இருந்தாலும் நாட்டுக்கு அடையாளம் காட்டி சிறையில் தள்ளுவோம் என்றும் மக்கள் மத்தியில் ஸ்டாலின் உறுதியளித்தார்.
துரைமுருகன் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்துப் பேசியவர், “புகார் வந்ததால் சோதனை செய்தோம் என்று வருமான வரித் துறை கூறுகிறது. பிரதமர் மோடியின் இல்லத்தில் பலகோடி ரூபாய் பணம் இருக்கிறது என்று நான் கூறினால் நடவடிக்கை எடுப்பீர்களா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் கோடி கோடியாகப் பணம் இருக்கிறது, அவரது வீட்டில் சோதனை செய்யுங்களேன்” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “காவல் துறை வேனில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணத்தை எடுத்துச் செல்வதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும், கட்சிக்கு அப்பாற்பட்டு உள்ள வியாபாரிகள், பொதுமக்களின் வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அத்தோடு காவல் துறை வாகனத்தையும் சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் காவல் துறை இந்த ஆட்சியின் ஏவல் துறையாக மாறியிருக்கிறது. காவல் துறை வாகனத்தை சோதனையிடவில்லை எனில் வாக்காளர்களே அவ்வாகனத்தை வழிமறித்து சோதனை செய்யும் நிலை வரும்” என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரை குறிவைத்து வருமான வரி, பறக்கும் படை சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டை ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார். இந்த நிலையில் காவல் துறை வாகனத்தை பறக்கும் படை சோதனையிடுமா என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.