இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு!!

றோ ( RAW) என்றால் என்ன என்று கேட்டால் இலங்கையில் சிறுவர்கூட உடனே அது இந்திய உளவு நிறுவனம் என்று கூறிவிடுவார்கள்.

இலங்கையில் மட்டுமல்ல பாகிஸ்தான், பங்காளதேஸ், நேபாளம், மாலைதீவு போன்ற நாடுகளில் கேட்டாலும் உடனே கூறிவிடுவார்கள்.

அந்தளவுக்கு இந்திய அரசு தன் றோ உளவு நிறுவனம் மூலம் அயல்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது.

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரியையும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாயாவையும் றோ உளவு நிறுவனம் கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது அனைவரும் அறிந்திருப்பீர்கள்..

கடந்த மாதங்களில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியது இலங்கையின் அதி உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரி என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஆகும்.

இது தொடர்பாக உடனடியாக ஒரு இந்தியர் கைது செய்யப்பட்டார். இந்த இந்தியர் கைது செய்யப்பட்டவுடன் அவரை யார் என்று தெரியாது என இந்திய தூதுவர் கூறினார். அதுமட்டுமல்ல அவர் ஒரு மனநோயாளி என்றும் கூறினார்.

கைது செய்யப்பட்ட இந்தியர்  யார் என்று தெரியாத இந்திய தூதுவருக்கு அவர் ஒரு மனநோயாளி என்பது மட்டும் எப்படி தெரிந்தது என்று யாராய் இருந்தாலும் இந்திய தூதுவர் மீது சந்தேகம் கொள்வர்.

ஆனால் எமது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ ஏன் பத்திரிகைகளோகூட இந்திய தூதரில் சந்தேகம் கொள்ளவில்லை.

மாறாக கைது செய்யப்பட்ட இந்தியர் நிரபராதி எனக்கூறி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் விடுதலை செய்யப்பட்ட விபரத்தை இலங்கை ஊடகங்கள் எதுவும் பிரசுரம் செய்யவில்லை. ஆனால் இந்து தமிழ் பத்திரிகை மிக்க பெருமையுடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

இங்கு எமக்கு தோன்றும் கேள்விகள் என்னவெனில்,

(1) இலங்கையில் பல வருடங்களாக விசாரணை முடியாமல் தமிழ் சிறைக்கைதிகள் இருக்கும்போது இந்த இந்தியர் மட்டும் எப்படி இவ்வளவு விரைவாக விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்?

(2) இந்த வழக்கில் ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவருடைய தொலைபேசி உரையாடல் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குரல் அவருடையதுதான் என்று குரல் பகுப்பாய்வு நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இந்தியர் மட்டும் ஏன் விடுதலை செய்யப்பட்டார்?

(3) இந்த இந்தியர் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்ததாக பொலிஸ் கூறுகிறது. அப்படியென்றால் அந்த குற்றத்திற்காவது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

கடலில் எல்லலை தாண்டி வந்துவிட்டார்கள் என்பதற்கே தமிழக மீனவர்களை கைது செய்து மாதக்கணக்கில் அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசு இந்த இந்தியரை அவ்வாறு செய்யாமல் விடுதலை செய்திருப்பது ஏன்?

(4) இந்த இந்தியர் ஒரு றோ அதிகாரி மட்டுமல்ல அவர் மலையாளி இனத்தவர் என்பதால்தான் இந்திய அரசு தனது தூதுவர் மூலம் செல்வாக்கை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது என்று கூறப்படுவது உண்மையா?

(5) தன்னை றோ உளவு அமைப்பு கொலை செய்ய முயற்சி செய்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய ஜனாதிபதி மைத்திரி இப்போது இந்த இந்தியர் விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்து எதுவும் கூறாமல் மௌனம் காப்பது ஏன்?

(6) இது குறித்து கோத்தபாயா ராஜபக்ச இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. அதுமட்டுமல்ல அவரது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்கூட கருத்து கூறாமல் மௌனம் காத்து வருவது என்?

இந்த வழக்கை அவதானிப்போர் வரக்கூடிய முடிவு

ஒன்றில், ஜனாதிபதி மைத்திரிக்கு விசர் முற்றி விட்டது. அதனால் உளறுகிறார் என்று கருதலாம். அது உண்மையாயின் அவரை உடனடியாக பதவியை விட்டு நீக்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இல்லையேல் ஜனாதிபதி மைத்திரியைவிட செல்வாக்கான ஒரு சக்தி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு மூடி மறைக்கிறது என கருதலாம். அது உண்மையாயின் அந்த சக்தி எது என்பதையாவது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது கடமையாகும்.

அது சரி, றோ என்றால் எமக்கு அனைவருக்கும் உடனே தெரிகிறது. இதேபோன்று சீனாவின் உளவு அமைப்பு பெயர் யாருக்காவது தெரியுமா? அது இலங்கையில் சம்பந்தப்பட்ட விபரம் ஏதும் இருக்கா? இலங்கையில் இந்தியாவைவிட சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகம் என்று கூறுவோர் இது பற்றிய விபரங்களை தெரியப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

தோ.பலா

No comments

Powered by Blogger.