ட்ரோலிங்கை எதிர்கொள்வது எப்படி?

நெட்டிசம்: சரா சுப்ரமணியம்

'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் ப்ரியா ஆனந்துடன் ஸ்ரீதேவி நடித்தார். ஸ்ரீதேவி இப்போது இல்லை. 'எல்கேஜி'யில் ப்ரியா ஆனந்துடன் ஜே.கே.ரித்தீஷ் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இப்போது இல்லை. ப்ரியா ஆனந்துடன் எவர் நடித்தாலும் அவர்கள் இறக்கிறார்கள். உடன் நடிப்பவர்களுக்கு துரதிர்ஷ்டத்தின் அடையாளமா ப்ரியா ஆனந்த்?"

- இது, ஆணழகன் என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கும் ஒருவர் பதிந்த போஸ்ட். கண்டும் காணாமல் போய்விடக்கூடிய சாதாரண ட்ரோலிங் போஸ்ட் அல்ல என்பதால் நடிகர் ப்ரியா ஆனந்த் ரிப்ளை செய்தார்.
"நான் பொதுவாக உங்களைப் போன்றொருக்கு பதிலளிப்பதில்லை. ஆனால், நீங்கள் கூறியிருப்பது துளியும் அறிவில்லாத விஷயம் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் கண்டுகொள்ளாமல் எளிதாகக் கடந்து போய்விடவும், உங்களையும் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாக்கவும் முடியும். இதற்குப் பதிலடி கொடுத்து, உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க விரும்பவில்லை.
ஆனால், நீங்கள் இப்படிச் சொல்வதால் கடும் வலிகள் தூண்டப்படும் என்பதை தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். எனவே, இதுபோல் கருத்துகளைப் பதிவதற்கு முன்பு ஒரு நொடி யோசியுங்கள்; சம்பந்தப்பட்டவரின் இடத்தில் இருந்து பாருங்கள்."
ப்ரியா ஆனந்தின் இந்தப் பதிலைத் தொடர்ந்து, அந்த நபர் மன்னிப்புக் கோரினார். அந்த மன்னிப்பை ப்ரியா ஆனந்த் மனதார ஏற்றுக்கொண்டார்.
சமூக வலைதளங்களில் தவிர்க்க முடியாத 'ட்ரோலிங்' எனும் இணைய வன்முறைக்கு பலியாகாமல் கடந்து போவதற்கு மட்டுமின்றி, சரியான நேரத்தில் பதிலடிகளைத் தர வேண்டியதும் அவசியம் என்பதையே நடிகர் ப்ரியா ஆனந்தின் அணுகுமுறை நமக்குப் புரியவைக்கிறது.
யாரெல்லாம் இலக்கு?
சமூக வலைதளங்களில் பிரபலங்களும் நட்சத்திரங்களும்தான் ட்ரோல் செய்யப்படுகிறார்கள் என்பது தட்டையான பார்வை. நீங்களும் நானும்கூட எளிதான இலக்குகளே. எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இத்தகைய இணைய வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சமூக வலைதளங்களில் பத்தில் நால்வர் ட்ரோல் செய்யப்படுவதாக சமீபத்திய சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.
தெரிந்த நட்பு வட்டங்களை மட்டுமே உள்ளடக்கிய சில நூறு பேரை மட்டும் நண்பர்களாக வைத்துள்ளவர்களும் இணைய வன்முறைக்கு ஆளாவதைத் தடுக்க முடியாது. தெரிந்த நபர் ஒருவரின் இழிவான ஒற்றைக் கருத்துப் பதிவு போதும், உங்களை அசைத்துப் பார்க்க. அதேபோல், ஆயிரக்கணக்கான நட்புகளும், ஃபாலோயர்களும் கொண்டுள்ள சற்றே தீவிரமாக எதாவது துறை சார்ந்து இயங்குபவர்களையும் சிலரது ட்ரோலிங் உடைத்துப் போட்டுவிடக் கூடும். இங்கு நம்பர்களோ நண்பர்களோ விஷயமில்லை. ஆனால், ட்ரோலிங்கை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் நமது சமூக வலைதள இருப்பை நிர்ணயிக்கும்.
ஒருவர் ட்ரோலிங் செய்யப்படுவதற்கு மிக முக்கியப் பொதுவான காரணம் 'பொறாமை'. இந்தப் பொறாமைக்கான காரணிகள் அவரவர்களுக்கு ஏற்பப் பல வகைகள் இருக்கலாம். ஒருவர் மீதான வெறுப்பை ட்ரோலிங் முறையில் காட்டுவதன் மூலம் கேரக்டர் அசாசினேட் செய்வதுதான் உச்சபட்ச நோக்கம். தாங்கள் செய்யும் ட்ரோலிங் மூலம் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாலோ, நேரத்தைக் கொன்றுவிட்டாலோ அல்லது இயங்காதபடி முடக்கப்பட்டுவிட்டாலோ அவற்றையே மகத்தான வெற்றியாக கொண்டாடும் சாடிசம் சார்ந்த மனநிலைதான் பரவலாகக் காணப்படும் போக்கு.
ஏனிந்த வெறித்தனம்?
சமூக வலைதளத்தின் வரமும் சாபமும் ஒன்றே. அதுவே 'ஃபேக் ஐடி'. உள்ளத்தில் உள்ளதை சென்சாரின்றிப் பதியக்கூடிய அற்புதமான சுதந்திரத்தைத் தரக்கூடிய உன்னத அனுபவத்தை ஃபேக் ஐடி வைத்திருப்போர் மட்டுமே உணர்வர். ஆனால், ட்ரோலிங் செய்வதற்கும், 'மாப்' உளவியல் மனநிலையுடன் குறிப்பிட்ட நபரையோ, அமைப்பையோ, கருத்தாக்கத்தையோ இழிவான மொழிகளுடன் ‘வைத்துச் செய்வ’தற்கே ஃபேக் ஐடிக்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஃபேக் ஐடிக்களை ஒழிப்பதுதான் ட்ரோலிங்கிற்குத் தீர்வா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில், இழிவான வார்த்தைகளுடனும் மலிவான மொழிகளுடனும் ட்ரோலிங் செய்யத் தயங்காத மனநிலையை எப்போதோ பெற்றுவிட்டார்கள் நம் நெட்டிசன்கள். அதாவது, சொந்தக் கணக்கில் இணையத்தில் இயங்குவதுகூட 'ஃபேக் ஐடி' போன்ற மனநிலையைத் தருவதாக நினைத்து இயங்கத் தொடங்கிவிட்டார்கள். நிஜத்தில் சொல்ல முடியாததை, செய்ய முடியாததை நிழலில் செய்யக்கூடிய தளமாக சமூக வலைதளத்தை அணுக ஆரம்பித்துவிட்டனர். எனவே, இவர்கள் பக்கம் யோசிப்பதைக் காட்டிலும், இவர்களின் ட்ரோலிங்கை எதிர்கொள்வது பற்றியே அதிகம் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இங்கே ட்ரோலிங்கிற்கும் கலாய்ப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைச் சொல்வது தகும். இயக்குநர் அட்லீயின் படைப்புகளை காப்பி என்று நிறுவி கலாய்ப்பது என்பது வேறு. ஆனால், அவரின் நிறத்தை மையமாக வைத்துக் கலாய்ப்பது ட்ரோலிங் எனும் இணைய வன்முறை. தவறான காரணிகளின் அடிப்படையில் ஒருவரை மனதளவில் காயப்படுத்துவது மட்டுமல்ல; காயப்படுத்தும் சாத்தியமுள்ள எதைப் பதிந்தாலும் அது வன்முறைதான் இங்கே.
சமூக வலைதளங்களில் மட்டுமல்ல; செய்தி வலைதளங்களில் செய்திகளுக்குக் கீழே கருத்துப் பதிவுகளில் ட்ரோலிங் மலிந்திருப்பதைப் பார்க்கலாம். தமிழில் முன்னணி தளங்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு இழிவான சொற்களைத் தாங்கிவந்த வாசகர்கள் கருத்துகளைப் பார்த்து நொந்து, கருத்துப் பகுதியையே காலி செய்த வரலாறு உண்டு. இந்த அழுக்கடைந்த மனப்போக்கு என்பது உலகெங்கும் பொதுவான என்பதற்கு 'கார்டியன்' செய்தி வலைதளம்தான் உதாரணம். கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சம் கேவலமான கருத்துகளை நீக்கியிருக்கிறது அந்நிறுவனம்.
என்னதான் செய்வது?
சமூக வலைதளத்தைக் கவனிக்கும் இணைய ஊடகவியலாளர் ஸ்நேகாவிடம் ட்ரோலிங் பற்றிப் பேசும்போது சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவை:
"தனிப்பட்ட முறையில், சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் பிரபலமாகும் ஒரு புகைப்படத்திற்கோ, எதாவது படைப்பிற்கோ வரும் அர்த்தமில்லாத, வன்மமான கமெண்டுகளை மட்டுமே ட்ரோலிங்காக நினைப்பதில்லை. இண்டலெக்சுவல்கள் என நிறுவிக்கொள்ளும் போலி அறிவுஜீவிகளின் விமர்சனங்களும்கூட ட்ரோலிங்காகவே படுகிறது. சொல்லப்போனால், சமூக வலைதளங்கள் அத்தனையிலும் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்துகொண்டே இருக்கிறது. முகத்திற்கு நேரே பேச தைரியம் இல்லாதவர்கள்கூட, ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டு திருப்தி அடைந்துகொள்கிறார்கள்.
இதைச் சமாளிக்கப் புதிதாக எதுவும் கண்டுபிடித்திருக்கவில்லை. 1) Commen sense 2) Acceptance - ட்ரோல் செய்திருப்பவர் எந்த மாதிரியான ஆள் என்பதை புரிந்துகொள்தல் முதல் படியாக இருக்கலாம். ஒருவேளை அவர் 10 ஆயிரம் ஃபாலோயர்களோடு பெரிய புள்ளியாக இருந்தாலும்கூட, கோட்பாடு ரீதியாக அவர் பிற்போக்கானவராக, பெண்ணின வெறுப்பு மிக்கவராக, ஆணாதிக்கவாதியாக இருக்கும் பட்சத்தில் அந்த கமெண்ட்டிற்கு நான் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது புரியும்.
கூடவே, நம்மால் கட்டுப்படுத்த முடியாத சில ரியாக்‌ஷன்களை நாம் வெறுமனே ஏற்றுக்கொண்டு கடந்துவிட வேண்டும். அதைக் கட்டுப்படுத்த நினைக்கும்போதுதான் உளவியல் ரீதியான அழுத்தங்கள் வரத் தொடங்குகிறது. நமக்கிருப்பது ஒரு சின்ன வாழ்க்கை. ஏதோ மூலையில் இருந்து எவனோ சொல்லும் ஒரு இழி சொல்லை நினைத்து பயந்து, நம் இயக்கத்தைக் குறைத்துக்கொள்ளும் போதுதான் ட்ரோல்கள் நம் பயணத்தை நிர்ணயிக்க அனுமதிக்கிறோம் என்று அர்த்தம். அதைச் செய்யாமல் இருக்க, கொஞ்சம் திமிரும் நிறைய துணிச்சலும் போதும்."
வலையுலக காலம் முதல் சமூக வலைதள காலம் வரை, தமிழில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் ஜாக்கி சேகர். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி, வாசகர்களாலும் நேரடி ட்ரோலிங் அனுபவத்தைப் பெற்றவர். அவரிடம் பேசும்போது, "ஆரம்ப காலத்தில் என் வீடியோ வடிவிலான சினிமா விமர்சனத்தை எனக்குத் தெரிந்தவர்களே ட்ரோல் செய்தனர். இதற்காக மெனக்கெட்டு பகடி என்ற பெயரில் சிரத்தையுடன் வீடியோக்களையும் வெளியிட்டனர். அப்போது நான் முடங்கிப் போயிருந்தால் இன்று என் வீடியோக்களின் எண்ணிக்கை 2,100ஐத் தொட்டிருக்காது; ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களை எட்டியிருக்க முடியாது.
வாசகர்களில் ஒருசிலர் என் உருவத்தை முன்வைத்து ட்ரோல் செய்வதும் உண்டு. "நீங்கள் மெனக்கெட்டு ட்ரோல் செய்யும் அளவுக்கு இருப்பதே எனது வெற்றி" என்று பதில் கூறுவதும் உண்டு. ஆனால், பெரும்பாலும் இதுபோன்ற இணைய வன்முறைக் கருத்துகளைக் கண்டுகொள்ளவே மாட்டேன். இதன் நோக்கமே நம்மை டிப்ரஷனுக்கு உள்ளாக்குவதும், செயல்பட முடியாமல் தடுப்படும்தான். எனவே, உதாசீனப்படுத்திவிட்டு நம் வேலையில் கவனம் செலுத்துவது ஒன்று மட்டுமே தீர்வு" என்றார் தீர்க்கமாக.
ஆக, இணையத்தின் பக்க விளைவுகளுள் ஒன்றான ட்ரோலிங், புல்லியிங் (trolling and bullying) போன்ற இணைய வன்முறைகளை தடுக்க முடியாதே தவிர எதிர்கொள்ள முடியும் எளிதாக. அப்படி எதிர்கொள்வோர் மட்டுமே சர்வைவ் உடன் வெற்றியும் பெறுகிறார்கள். இதற்கு, கண்டுகொள்ளாமல் கடந்து போவது மட்டுமின்றி, சரியான இடங்களில் கெத்தாக நின்று செல்வதும் உறுதுணை புரியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.