அரசு முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய விஷால்!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்த விஷால் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வைப்பு நிதி 7 கோடி ரூபாயை முறைகேடு செய்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. சங்கத்திற்கு ஏற்கெனவே அலுவலகம் இருந்த நிலையில் தி,நகரில் விஷால் தரப்பு புதிய அலுவலகம் தொடங்கியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய அதிருப்தி உறுப்பினர்கள், முதலமைச்சரை சந்தித்தும் முறையிட்டனர். இதன்விளைவாக ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு கையிலெடுத்தது. தமிழக அரசு சார்பில் மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமிக்கப்பட்டார்.
விஷால் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்று (ஏப்ரல் 30) முடிவடைய உள்ளது. தேர்தல் தேதியை தீர்மானிக்கவும் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் வருகிற மே 1ம் தேதி பொதுக்குழு கூட இருக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம் என்றும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு நேற்று (ஏப்ரல் 29) விஷால் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணா முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை