கோயம்பேட்டில் மெட்ரோ ஊழியர்கள் போராட்டம்!
8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் இன்று ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து தற்காலிக ஊழியர்களால் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என்று இரு பிரிவாகப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ நிறுவனப் பணியைப் பொருத்தவரை, நிரந்தர ஊழியர்களைக் காட்டிலும் தற்காலிக ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர் நிரந்தர ஊழியர்கள்.
கடந்த சில மாதங்களாக நிரந்தர ஊழியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தவும் மெட்ரோ நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மெட்ரோவில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் மெட்ரோ ரயில் பணியாளர்கள் சங்கத்தைப் பதிவு செய்து செயலாற்றத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் சங்கம் அமையக் காரணமாக இருந்த 8 ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்தது மெட்ரோ நிர்வாகம். இது தொடர்பாக இதரப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோது, புதிதாக எந்த தற்காலிகப் பணியாளரையும் வேலைக்கு அமர்த்துவதில்லை என்று ஊழியர்களிடம் உறுதியளித்தது நிர்வாகம்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 29) 8 பேரும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட 8 ஊழியர்களின் குடும்பத்தினரும், இதர நிரந்தர ஊழியர்களும் சென்னை கோயம்பேட்டிலுள்ள மெட்ரோ தலைமையகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மெட்ரோ நிர்வாக இயக்குனரைச் சந்தித்து இது பற்றி விளக்கம் கேட்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
நிரந்தர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இன்று மாலையில் சென்னை மெட்ரோ இயக்கம் நின்றுபோனது. இதையடுத்து, சில நிமிடங்களில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டது மெட்ரோ நிர்வாகம். தற்காலிக ஊழியர்களைக் கொண்டு, தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள நிரந்தர ஊழியர்களை வரும் நாட்களில் நீக்கிவிட்டு, தற்காலிக ஊழியர்களை மட்டுமே மெட்ரோவில் பணியமர்த்தும் வேலைகள் நடந்துவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர் பாதிக்கப்பட்ட பணியாளர்களின் குடும்பத்தினர். இந்த போராட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினரும் இணைந்துள்ளனர். தற்போது காலவரையற்ற போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர் நிரந்தர ஊழியர்கள். மெட்ரோ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, ஊழியர்களின் போராட்டம் தொடருமா, இல்லையா என்பது தெரிய வரும்.
கருத்துகள் இல்லை