என்டிஆர் பயோபிக்: இயக்குநரை தடுத்துநிறுத்திய போலீஸ்!
பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய லஷ்மி என்டிஆர் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க சென்றபோது விஜயவாடா விமான நிலையத்தில் அவரை ஆந்திர போலீசார் சிறைவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லட்சுமி என்டிஆர் என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள ராம்கோபால் வர்மா, தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அப்படத்தில் வில்லன் போல் சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.
இப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ராம்கோபால் வர்மாவை ஆந்திராவுக்குள் வரவிடாமல் தடுக்க தெலுங்குதேசம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த ஆந்திர முதல்வர் என்டிஆர் குறித்த இப்படத்தில் சந்திரபாபு நாயுடு சில சூழ்ச்சிகள் செய்து தெலுங்கு தேசம் கட்சியை தன் வசப்படுத்தியதாக இப்படத்தின் டிரெய்லரில் காட்சிகள் உள்ளன. இதனால் தெலுங்கு தேச கட்சி ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மே 1ஆம் தேதியன்று, ஹைதராபாத்தில் உள்ள என்டிஆர் சதுக்கத்தில் செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொது இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று தெலங்கானா போலீசார் தடை விதித்துள்ளனர்.
காவலில் வைக்கப்பட்டிருந்த ராம் கோபால் வர்மா, உண்மையை பேசியதற்காக தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவில் ஜனநாயகம் இல்லை எனவும் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பின்னர் அவர் விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர அரசின் இச்செயலைக் கண்டித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை