செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!

செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 29) உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார் இந்நிலையில், செந்தில் பாலாஜி உத்தரவின் பேரிலும், ஜோதிமணியின் அறிவுரையின் பேரிலும் வழக்கறிஞர் செந்தில் என்பவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் தனது வீட்டிற்கு வந்து தகராறு செய்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டார்கள். அப்போது,இறுதிக் கட்ட பிரச்சாரம் தொடர்பாகக் காலையில் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என்றேன். சுமார் 100க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர் என்று தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, ஜோதி மணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வேண்டி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 29) நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட மூவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.