‘புலிகளுடன் தொடர்புடைய ரோய்க்கு, சரத், சிவியுடன் தொடர்பு’!!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயவுக்கு எதிராக, அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்திருந்த கனேடியத் தமிழரான ரோய் சமாதானம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடனும் தொடர்புகளை பேணி வருகின்றார் என்றது.

பத்தரமுல்ல - நெளும் மாவத்தையில் கட்சி தலைமையகத்தில், நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர, மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், றோய் சமாதானத்துடன், சி.வியும், பொன்சேகாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காண்பித்தார்.

​கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை, மே மாத இறுதிக்குள் நீக்கப்படுமெனத் தெரிவித்துள்ள அவர், சு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐ.தே.கவுக்கு கட்சி தாவவுள்ளனர் என்றார்.

மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கு இதுவே இறுதி புதுவருடமாகுமெனத் தெரிவித்த அவர், தேர்தலில் வெற்றிப்பெறுவதை இலக்காகக்கொண்டு, பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

இதன்படி, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி திரு​கோணமலையில் வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர், அநுராதபுரம், தம்புள்ளை, குருநாகல், திவுலப்பிடிய, ஒருகொடாவத்த ஊடாக, கொழும்பு கெம்பல் மைதானத்தை மே முதலாம் திகதி வந்தடையும் என்றார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியது முதல் , பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

உள்நாட்டு நீதிமன்றங்களை அவருக்கு எதிராக பயன்படுத்தி வந்த அரசாங்கம், தற்போது வெளிநாட்டு நீதிமன்றங்களையும் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது என்றார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணைகளை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.