இடைத்தேர்தல்: குழப்பத்தைத் தீர்த்த விஜயகாந்த்!!

மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள 4 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கும் மே 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியைக் கைப்பற்ற திமுகவும் இந்நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக அணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஏற்கெனவே 18 தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்த நிலையில், தற்போது இந்த 4 தொகுதிகளுக்கும் ஆதரவளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேமுதிக போட்டியிட்ட 4 தொகுதி வேட்பாளர்களையும் அழைத்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கள நிலவரங்கள், பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார். அப்போது அதிமுக தரப்பிலிருந்து தங்களுக்கு போதிய ஆதரவு இல்லை; அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும்தான் கவனம் செலுத்தினார்கள் என்று சுதீஷ் உட்பட நால்வரும் புகார்களை அடுக்கியுள்ளனர். இதனால் அடுத்துவரும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என்ற ஆலோசனையும் அப்போதே நடந்துள்ளது.
அதுமட்டுமின்றி சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் இந்த எண்ணத்துக்கு காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் கூட இன்னும் வெளியாகாத நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப் போட்டியிடுவது சரியாக இருக்காது என்றும் தேமுதிக தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தவிர இப்போதே கூட்டணியில் இருந்து விலகினால், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுகவின் ஒத்துழைப்பு இருக்காது. அது பெரிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் என்பன போன்ற விஷயங்களை முன் வைத்து மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகே தேமுதிக தனித்துப் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டுள்ளது.
4 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு முழு ஆதரவளிப்பது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று (ஏப்ரல் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி சட்ட மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக நான்கு நாட்களுக்கு முன்பே அதிமுகவுக்கு இடைத்தேர்தல் ஆதரவை வழங்கிவிட்டது. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து அறிவித்துவிட்டார். இந்நிலையில் இன்னும் பாஜகவிடம் இருந்துதான் அதிமுகவுக்கான ஆதரவு பற்றிய முறையான அறிவிப்பு வெளிவரவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.