ரொமேனியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வு!!

ரொமேனியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் இந்த நிலப்பகுதியில் ஏறக்குறைய கி.மு.8000 காலகட்டத்தில் மனித இனம் வாழ்ந்த ஒரு பகுதியாக சான்று பகர்கின்றன. கி.மு. 600 வாக்கில் பண்டைய கிரேக்கர்கள் இந்த நிலப்பகுதியில் வணிகத்திற்காக வந்து சென்ற அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. இவர்களில் பலர் கருங்கடல் பகுதிகளிலேயே தங்கி  இப்பகுதி மக்களாகவே வாழத்தொடங்கினர்.


ரோமானியர்களோ ரொமேனிய மக்களை டாசியன் என்ற பெயரில் அடையாளப்படுத்தினர். படிப்படியாக இப்பகுதியின் வர்த்தகம் புகழ்பெறவே பல நாட்டினர் ரொமேனியாவிற்கு வரத்தொடங்கினர்.  பல இனக்குழு மக்கள் இங்கேயே தங்கிவிட்டனர். 

கி.பி 14ம் நூற்றாண்டு வாக்கில் தான் பல சிறு நகரங்களும் ஊர்களும் ராடு நேக்ரு  (1310-1352) வினால் ஒருங்கினைக்கப்பட்டு வாலாச்சியா என்ற பெயரில் இப்பகுதி விளங்கியது. பின்னர் மொல்டோவியா என்ற பகுதி உருவானது. இன்று மொல்டோவியா ஒரு தனி நாடாகத் திகழ்கின்றது.

கி.பி15ம் நூ ஓட்டோமான் பேரரசின் துருக்கியப் படைகள் இப்பகுதியைத் தாக்கின. இந்தக் காலகட்டத்தில் மன்னராக இருந்தவர் தான் விலாட் என்ற மன்னன். இன்று நாம் அறிந்த ட்ராகுலா பேய் கதைக்கு நாயகன் இவன்.

கி.பி.17, 18ம் நூற்றாண்டில் வாலாச்சியாவும் மொல்டோவியாவும் துருக்கியின் ஆளுமைக்குள் வந்தன. பல அரசியல் மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. கி.பி.1859ம் ஆண்டு இந்த 2 பெரிய மாவட்டங்களும் இணைக்கப்பட்டு புதிய நாடான ரொமேனியா பிறந்தது.

 1877ம் ஆண்டு துருக்கியிடமிருந்து ரொமேனியா சுதந்திரம் பெற்றது. கி.பி.1881ம் ஆண்டு ரொமேனியா ஒரு பேரரசாக மாற்றம் கண்டது. அதன் முதலாம் பேரரசராக மன்னர் முதலாம் கார்ல் முடிசூட்டிக் கொண்டார்.
முதலாம் இரண்டாம் உலகப் போர் ரொமேனியாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தியது. 2ம் உலகப் போரின் போது ஜெர்மனி-ஜப்பான் கூட்டு நாடுகளுடன் தனது நட்பை நிலை நாட்டியது ரொமேனியா.

1943ம் ஆண்டுக்குப் பின்னர் ரஷிய படைகள் ரொமேனிய எல்லைக்குள் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டன. கம்யூனிச ஆட்சி 1947க்குப் பின் உருவானது. 1958 வாக்கில் ரஷிய படைகள் ரொமேனியாவை விட்டு வெளியேறின. உள்ளூரில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, பல அரசியல் சலசலப்புக்களை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று ரொமேனியாவின் கம்யூனிச அரசு 1989ம் ஆண்டு வீழ்ச்சி கண்டது. நாடாளுமன்றத்துடன் கூடிய பார்லிமண்ட் அதனைத் தொடர்ந்து அமைந்தது. 2004ம் ஆண்டில் ரொமேனியா நாட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக இணைந்தது. அடுத்து 2007ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

ரொமெனியவின் இன்றைய பிரதமர் வியோரிக்கா டான்சிலா என்ற பெண்மணியாவார். ரொமேனியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

-சுபா









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.