பறக்கும் படையை மீறி உள்ளே வந்த கள்ளநோட்டு!!

சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜில், ஹவாலா கும்பல் அறை எடுத்துத் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனடியாக அந்தக் கும்பலைக் கண்காணித்த போலீஸார், நள்ளிரவில் அதிரடியாக அந்த அறைக்குள் நுழைந்தனர். அப்போது, புத்தம் புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைப் பறிமுதல்செய்த போலீஸார், ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சமயத்தில், 'சென்னை எழும்பூர் கென்னத் லேனில் உள்ள லாட்ஜில் அறை எண் 302-ல் ஹவாலா கும்பல் தங்கியுள்ளது. உடனடியாக அங்கு சென்றால் அவர்களைப் பிடிக்கலாம்' என்ற தகவல் எழும்பூர் போலீஸாருக்குக் கிடைத்தது. போலீஸார், உடனடியாக அந்த லாட்ஜிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அறை எண் 302-ல் யார் யார் தங்கியுள்ளனர் என்ற விவரத்தை போலீஸார் கேட்டறிந்தனர்.

 போலீஸார் அங்கு சென்றபோது, அந்த அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால், அறையில் தங்கியிருந்தவர்கள்  வரும்வரை போலீஸார் அங்கேயே காத்திருந்தனர். நள்ளிரவில், அந்த அறைக்குள் ஒருவர் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து போலீஸாரும் சென்றனர். கதவை போலீஸார் தட்டியதும் வெளியில் வந்த அந்த நபர், ''நீங்கள் யார்'' என்று கேட்டார். அதற்கு, ''நாங்கள் போலீஸ், இந்த அறையைச் சோதனை செய்ய வேண்டும்'' என்று கூறினர்.

 இதையடுத்து, அறை முழுவதும் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டுக்குக் கீழே உள்ள சூட்கேஸை போலீஸார் திறந்துப்பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். `இவ்வளவு பணம் உனக்கு எப்படி கிடைத்தது' என்று அந்த நபரிடம் விசாரித்தனர். அதற்கு அவர், முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். பணத்தைப் பறிமுதல்செய்த போலீஸார், அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அந்த நபரின் பெயர் மலையரசன் என்றும், நெல்லை மாவட்டம் கயத்தாறு, பனிக்காரன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் பணம்குறித்து விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``லாட்ஜில் ஹவாலா கும்பல் தங்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம். அப்போது, அறை எண் 302ல் மலையரசன் என்பவர் தங்கியிருந்தார். அவரிடம் 50 லட்ச ரூபாய் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வுசெய்தபோது, அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. மலையரசனுக்கு கள்ள நோட்டுகளை யார் கொடுத்தது என்று விசாரித்துவருகிறோம். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கீழ்ப்பாக்கம் காவல் சரகத்தைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவருக்குக்  கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில்தான் லாட்ஜில் சோதனை நடத்தினோம். அந்த அறையில் மலையரசனுடன் இன்னொருவர் தங்கி இருந்துள்ளார். போலீஸார் வரும்போது, அவர் அந்த அறையில் இல்லை. இதனால், அவர் யார் என்று மலையரசனிடம் விசாரித்துவருகிறோம்.  மேலும், இந்தச் சம்பவத்தில் சர்வதேச அளவிலான நெட்வொர்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றார்.

தேர்தல் நடைபெறவுள்ள இந்தச் சமயத்தில், ரூ. 50 லட்சம் கள்ள நோட்டை பறக்கும்படையினருக்குத் தெரியாமல் மலையரசன் எப்படி கடத்திவந்தார் என்று விசாரணை நடந்துவருகிறது.  மலையரசனின் கூட்டாளிகள் யார் என்றும், அவரின் செல்போனையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அவரின் செல்போனுக்கு கடைசியாக வந்த போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மலையரசனிடம் போனில் தொடர்புகொண்ட நபர், கள்ள நோட்டுகளை வாங்க லாட்ஜுக்கு வருவதாகக் கூறியுள்ளார். அதற்குள் மலையரசன் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். இந்தச் சம்பவத்தில், 50 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் மலையரசன் லாட்ஜில் அறை எடுத்து தங்கும் தகவலை போலீஸாரிடம் போட்டுக்கொடுத்த இன்பார்மர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், பதற்றத்தில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அதில் ஒருவர் மட்டும் போலீஸிடம் சிக்கியுள்ளார். அவரிடம்தான் துருவித்துருவி விசாரணை நடந்துவருகிறது.

 50 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.