குடும்பம், இலட்சியம் பற்றி தலைவாசல் விஜய் மனைவி ராஜேஸ்வரி!!

ராஜேஸ்வரி விஜய். பளிச்சுனு புரிகிற மாதிரி சொல்லணும்னா, திருமதி தலைவாசல் விஜய்.
செலிபிரெட்டி மனைவி, இரண்டு நீச்சல் சாம்பியன்களின் அம்மா... அவருடைய பர்சனல் உலகம் எப்படிப்பட்டது; அவருடைய ரியல் ஹீரோ எப்படிப்பட்டவர்; பிள்ளைகளுடைய வெற்றியில் இவருடைய பங்கு என்ன... விளக்கமாக பேசக் கேட்டோம். ரொம்ப நாள்கள் பழகிய அன்னியோன்யத்துடன் பேச ஆரம்பித்தார் ராஜேஸ்வரி விஜய்.


உங்க கணவரை முதல் முதலா சந்திச்ச நாள் நினைவில் இருக்கா?

``மை காட்...  அது 27 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. இருந்தாலும் அதை மறக்க முடியுமா? எங்க தாத்தா - பாட்டிக்கு பூர்வீகம் வாலாஜாபாத்தான் என்றாலும், எங்க அப்பாவோட வேலை காரணமா ஜாம்ஷெட்பூரில்தான் செட்டிலாகி இருந்தோம். அப்ப, இவர் `தலைவாசல்' படத்துல நடிச்சு முடிச்சுட்டு, `தேவர் மகனில்' கமிட் ஆகியிருந்தார். நான் இவரோட `தலைவாசல்' படம்கூட பார்த்தது கிடையாது. பொண்ணுப் பார்க்க வந்தார். என் சித்தி, `மாப்பிள்ளையைப் பார்த்துக்கோ'ன்னு சொன்னப்போகூட நான் மறுத்துட்டேன். அவர் என்னைப் பார்த்துட்டு, `என்னைப் பிடிச்சிருக்கு'ன்னு சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் அவரைப் பார்ப்பேன். அதுவரைக்கும் அவரோட போட்டோவைக்கூட பார்க்க மாட்டேன்'னு சொல்லிட்டேன். அவர் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதோட என்கிட்ட தனியாக பேசணும்னும் சொன்னார். பேசினோம். என் அம்மா - அப்பா நம்மகூடத்தான் இருப்பாங்க. எங்க அம்மா அப்பாவை எந்த அளவுக்கு மதிக்கிறேனோ அதே அளவுக்கு உங்க அம்மா அப்பாவுக்கும் மரியாதை கொடுப்பேன். நான் சினிமா இன்டஸ்ட்ரியில் இருக்கிற ஆளு. எனக்கு வருமானம் கூடும்; குறையும். குறைஞ்சா அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்; அதிகமா வந்தா அடக்கமா செலவழிக்கணும்னு கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டார். எனக்கு அந்த நிமிஷமே இவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.''


விஜய் கணவரா எப்படி?

``நான் கல்யாணத்துக்கு முன்னாடி டீச்சரா வேலை பார்த்தேன். கல்யாணத்துக்கப்புறம் குடும்பத்தைப் பார்த்துக்கிற வேலை மட்டும்தான். பிள்ளைங்களை நீச்சல் பயிற்சிக்கு காலையில 4 மணிக்கெல்லாம் கூட்டிட்டுப் போகணும்கிறதால, இவர் வீட்டு வேலைகள்லேயும் என்னோட ஷேர் பண்ணிப்பார்.  இன்னிக்குக் காலையில வரைக்கும் காலையில் ஷூட்டிங் கிளம்பறதுக்கு முன்னாடி, வீட்டைப் பெருக்கி, நைட்டு சாப்பிட்டுப் போட்ட பாத்திரத்தையெல்லாம் கழுவி வைச்சுட்டுத்தான் போறாரு. அதே மாதிரி எங்களுக்குள்ள சண்டை வந்தாலும், ஷூட்டிங் போகிற வழியிலேயே எனக்கு போன் பண்ணி பேசிடுவாரு. அவருடைய கோவத்துக்கு ஆயுசு அவ்வளவுதான்!''

 உங்க பெற்றோரும் உங்க கணவரோட பெற்றோரும் ரொம்ப ஃபிரெண்ட்லின்னு கேள்விப்பட்டோமே... 

``ஆமாங்க, எங்க ரெண்டு பேர் அம்மாவும் ஒண்ணா தாயம் விளையாடுவாங்க. எங்க ரெண்டு பேரோட அப்பாவும் ஒண்ணா கேரம் போர்டு விளையாடுவாங்க. சிலர், 'வீட்டுக்குள்ள தாயம் விளையாடினா தரித்திரம்'னு சொன்னாங்க. ஆனா, அவர் `அவங்க ரெண்டு பேர் சந்தோஷமா இருக்கிறதுதான் முக்கியம். தரித்திரம் வந்தா வரட்டும்'னு சொல்லிட்டார். இதைவிட பெரிய விஷயம், வாரம் ஒரு தடவை எங்க ரெண்டு பேர் அப்பா அம்மாவையும் ஒண்ணா நிக்க வைச்சு திருஷ்டி சுத்திப் போடுவார்.''


உங்க பிள்ளைகளோட நீச்சல் சாதனைக்கு நீங்கதான் முக்கியமான காரணம்னு உங்க கணவர் ஒரு பேட்டியில சொல்லியிருக்காரே...

``அச்சச்சோ.... (சிரிக்கிறார்) அவருடைய உழைப்பு இல்லன்னா இது சாத்தியமே இல்லைங்க. இ.எம்.ஐ. கட்டுறதுக்கு பணம் எடுத்து வைச்சிருப்பார். நான் `பசங்களுக்கு ஸ்விம் சூட் வாங்கணும். 32,000 ரூபாய் கொடுங்க'ன்னு கேட்பேன். அப்படியே பணத்தை எடுத்து என் கையில் கொடுத்துட்டுப் போயிடுவார். மத்தபடி, நான் கல்யாணத்துக்கு முன்னாடி ஜம்ஷெட்பூர்ல டீச்சராக இருந்ததால, பசங்களைப் படிக்க வைக்கிறது, அவங்க டீச்சர்ஸை மீட் பண்றது, அடுத்து எங்க ஸ்விம்மிங் காம்படிஷன் வருதுன்னு பார்த்து அப்ளை பண்றது, அதோட என் ஹஸ்பெண்டோட  கணக்கு வழக்கு,  அது சம்பந்தமா ஆடிட்டரை பார்க்கிறது, பேங்க் வேலைகளையெல்லாம் பார்த்துக்கிறதுன்னு என் குடும்பத்துக்கான அத்தனை வேலைகளையுமே என்னால பேலன்ஸ் பண்ண முடிஞ்சது. அதனால, அப்படி சொல்லியிருப்பார். மத்தபடி, நீச்சல் போட்டிகளுக்குப் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வெளியூர், வெளிநாடு போறப்போ இவரும் எங்ககூட வந்துடுவார். சவுத் சைடுல காம்படிஷன் இருந்தா, தங்குற ஹோட்டல்ல இவரை எல்லோருக்கும் தெரியும்கிறதால, நீச்சல் வீரர்களுக்கான சமையலை நானே சமைக்கிறதுக்கு ஹோட்டல்ல பர்மிஷன் வாங்கிக் கொடுத்துவார். இதுவே நார்த் சைட் காம்படிஷன் இருந்துச்சுன்னா, அங்கே தங்குற ஹோட்டல்கள்ல, அவங்களுக்கு தெரிஞ்ச பாஷையில பேசி, நான் பர்மிஷன் வாங்கிப்பேன்.''

அவங்களுக்குத் தெரிஞ்ச பாஷைன்னா, உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

``பீஹாரி, இந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ், ஒரியா, போஜ்புரி, பஞ்சாபி புரியும், எனக்குக் கல்யாணமான புதுசுல அவ்வளவா தமிழ் தெரியாது. என் மாமியார்தான் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்களுக்கு தன் மருமகளுக்கு நிறைய பாஷை தெரியும்கிறதுல ரொம்ப பெருமை. ஆனா, `இனிமே நீ தமிழ்நாட்டுலதான் வாழப் போறே. அதனால கண்டிப்பா தமிழ் கத்துக்கணும்'னு  சொல்லிக் கொடுத்தாங்க.''



இப்ப உங்களுடைய பிள்ளைங்க என்ன பண்றாங்க?

``பையன் இன்டர்நேஷனல் அளவில் வெண்கலம் ஜெயிச்சவன். இப்ப, சைக்காலஜி படிச்சுட்டு வேலை பார்த்துக்கிட்டு இருக்கான். பொண்ணு இந்தியாவின் வேகமான நீச்சல் வீராங்கனை. இப்போ ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டிருக்கா. ஸோ, இப்ப கொஞ்சம் ஓய்வாதான் இருக்கேன். ஒரு மாசம் முன்னாடி, என் பையன் `அம்மா உனக்கு எப்பவும் என்கேஜ்டா இருக்கிறதுதானே ரொம்பப் பிடிக்கும்'னு சொல்லி, பாக்கு மட்டை தட்டு உருவாக்குற பிசினஸ் வைச்சு கொடுத்திருக்கான். ஒரு மாசம்தான் ஆச்சு. அதை டெவலப் பண்ணணும். நிறைய பெண்களுக்கு வேலை கொடுக்கணும். அடுத்த லட்சியம் உருவாகிடுச்சு...'' என்றவரின் குரலில் நிறைவு ததும்பி வழிகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.