பிரிகேடியர் பால்ராஜ் பற்றி வெளியாகிய கட்டுரை – வழக்கை தள்ளுபடி செய்து யாழ். நீதிவான் உத்தரவு!

பிரபல பத்திரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் பற்றி வெளியாகிய கட்டுரை தொடர்பாக பயங்கரவதாத விசாரணைப் பிரிவினர் தாக்கல் செய்த வழக்கை யாழ். நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


அந்தக் கட்டுரையால் பாதிக்கப்பட்டவர் யார்? அவரின் முறைப்பாடு தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தமது அறிக்கையில் வெளிப்படுத்தவில்லை. எனவே அதிகாரிகளின் உரிய அறிவுறுத்தல், ஆலோசனையைப் பெற்று பொருத்தமான நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பத்திரிகையில் “வீரத் தளபதி பால்ராஜ்” என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரையின் ஊடாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அதனால் அந்த ஊடகத்தின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை வழங்கக் கோரியும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற  நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இதன்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரி மன்றில் முன்னிலையானார். பத்திரிகையின் ஆசிரியரும் அவரின் சார்பில் மூத்த சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மன்றில் முன்னிலையானார்.

ஊடகத் துறையின் பொறுப்பு மற்றும் அவற்றின் உரிமை பற்றி சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட விளக்கங்களை விபரித்த நீதிவான், இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆழமாக ஆராய்ந்து கட்டளையை வாசித்தார்.

“ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை உள்ளது. ஆனால் தேசிய நலன், பொது மக்கள் பாதுகாப்பு, இனம் – மத நல்லிணக்கம் ஆகியவற்றில் ஊடகங்கள் பொறுப்பாகச் செயற்படுவது அவசியம்.

அந்த வகையில் இந்த வழக்கில் தேசிய நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்டதாக பத்திரிகை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பத்திரிகை கொழும்பிலிருந்துதான் வெளியிடப்படுவதாக எதிர் தரப்பால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதனால் இந்த நீதிமன்றுக்கு நியாயத்திக்கம் இல்லை என அந்த தரப்பால் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கட்டுரையால் எந்தவொரு பாதிப்பும் இடம்பெறவில்லை எனவும் எதிர்த் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்ற நியாயத்திக்கத்தை வைத்து இந்த வழக்கை நிராகரித்துவிட முடியாது. யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பத்திரிகை 10 ரூபாயிக்கு விநியோகிக்கப்படுவதாக வழக்குத் தொடுனர் அறிக்கையிட்டுள்ளார்.

இந்த வழக்கில் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையின் மூலம் பாதிக்கப்பட்டவர் யார்? அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் மற்றும் அவரின் முறைப்பாடு தொடர்பில் வழக்குத் தொடுனர் வெளிப்படுத்தவில்லை.

அதிகாரிகளின் உரிய ஆலோசனைகள் – அறிவுறுத்தல்கள் இன்றி இவ்வாறான வழக்கைத் தொடர்வதால் பயனில்லை. எனவே பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இந்த வழக்குத் தொடர்பில் உரிய ஆலோசனைகளைப் பெற்று பொருத்தமான நீதிமன்றில் வழக்கை தொடர நீதிமன்று அறிவுறுத்துகின்றது. அதனால் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளையிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.