ரஷ்ய விமான விபத்தின் காட்சிகளை விவரிக்கும் விமானி!!

ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து நேற்று முன் தினம் மாலை 6:02 மணிக்கு  சூப்பர் ஜெட் 100 என்ற  விமானம், ரஷ்ய நகரமான மர்மன்ஸ் நோக்கி புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட அடுத்த 10-வது நிமிடத்தில், மீண்டும் மாஸ்கோ விமானநிலையத்திலேயேஅவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்குவதற்குள் அதன் பின்பகுதியில் தீ பற்றிக்கொண்டது. மளமளவென விமானத்தின் முன்பகுதிக்குப் பரவியது. தீப் பிழம்பு மற்றும் பெரும் புகையுடனேயே ரன்வேயில் ஓடி நிறுத்தப்பட்டது. மொத்தமாக 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என 78 பேர் அதில் பயணம் செய்தனர். அவர்களில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள், விமானத்தில் உள்ள அவசரகால வழிமூலம் தப்பித்துள்ளனர். பற்றி எரியும் விமானத்திலிருந்து பயணிகள் தப்பிக்கும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
விமான விபத்து
மோசமான வானிலையே விபத்துக்குக் காரணம் என பெரும்பாலான பயணிகள் கூறுகின்றனர்.இது தொடர்பாக ரஷ்ய ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள விமானி டெனிஸ் யெவ்டொகிமோவ் (Denis Yevdokimov ), “ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பெரிய மின்னல் ஒன்று தாக்கியது. அதனால், எங்களுக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், நாங்கள் அவசரகால வழிமுறையை உபயோகித்தோம். அதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைப் பெற மீண்டும் முயன்றோம். ஆனால், சில விநாடிகள் மட்டுமே எங்களுக்குத் தொடர்பு கிடைத்தது. அந்த நேரத்தில், ஓரிரு வார்த்தைகளில் நடந்தவற்றை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டு உடனடியாக விமானத்தைத் தரையிறக்கிவிட்டோம். 
ரஷ்ய விமான விபத்து
மின்னல் நேரடியாக விமானத்தின்மீது படவில்லை. விமானத்தின் டேங் முழுவதும் எரிபொருள் இருந்ததால், தரையிறங்கும்போது டேங்க் தரையில் மோதித் தீ பிடித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட கறுப்புப் பெட்டி, அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், விபத்து தொடர்பாக ஆராய்ச்சி செய்துவருகின்றனர் ” என்று அவர் கூறியுள்ளார். 
எரிந்த நிலையில் ரஷ்ய விமானம்
இதையடுத்து, விமானத்திலிருந்து உயிர் தப்பிய விமான பணிப்பெண் டட்யானா கசாகினா (Tatyana Kasatkina), “ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பெரிய மின்சார ஆற்றல் எங்களைத் தாக்கியதாக உணர்ந்தோம். மிகப் பெரும் அடிபோல விழுந்தது.  நாங்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டதாக நினைத்தோம். தரையிறங்குவது மிகவும் கடினமாக இருந்தது. பயணிகள் அனைவரும் பயத்தில் நடுங்கினர்.  விமானம் தரையில் பட்டதும் அடுத்த நொடியே தீப்பற்றியது. பயணிகள் அலறும் சத்தம் இன்னும் என் காதில் கேட்கிறது. 
விமானம் தரையிறங்கியதும், முன் பகுதிகளில் உள்ள பயணிகள் அவசரகால வழிமூலம் வெளியேறினர். ஆனால், சிலரால் அதில் செல்ல முடியவில்லை. அவர்களின் அருகில் இருந்த நான், பயணிகளின் காலரைப் பிடித்து இழுத்தும் காலால் உதைத்துத் தள்ளியும் அவர்களை வெளியேற்றினேன். விமான அறைகள் தீயில் உருகியதை என் கண்ணால் பார்த்தேன். இவை அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. என் வாழ்நாளில் இதை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

எரிந்தபடியே விமானம் தரையிறங்கும் வீடியோக்களும், விமானத்தின் உள்ளே இருந்த சில பயணிகள் எடுத்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.