தனியாகும் ரஷ்யாவின் இணையம்!!

உலக இணையத்திலிருந்து முழுவதுமாக வெளியேற முடிவு செய்திருக்கிறது ரஷ்யா. அந்த முயற்சியில் மட்டும் வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் டிஜிட்டல் உலகின் வல்லரசாக ரஷ்யா அடையாளப்படுத்தப்படும்.`இனிமேல் எங்களுக்கு தனி இன்டர்நெட்!' ரஷ்யாவின் இணையம் இனி என்னாகும்?
`இணையம் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லையென்ற நிலை இன்று இருக்கலாம். ஆனால் அந்த இணையமே இனி தேவையில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான ரஷ்யா. உண்மைதான், இணையம் உலகம் முழுவதுமே World Wide Web என்பதை அடிப்படையாக வைத்துத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிலிருந்து தற்பொழுது ரஷ்யா விலக விரும்புகிறது. அதன் முதல் படியாக ரஷ்யாவுக்கு மட்டுமேயான இணையக் கட்டமைப்பை உருவாக்கும் சட்டத்தை அமல்படுத்தும் உத்தரவில் கடந்த வாரம் கையொப்பமிட்டிருக்கிறார் அதிபர் புதின்.

 எதிர்ப்பு தெரிவித்த மக்கள்...கண்டுகொள்ளாத அரசு

இந்த முயற்சியைப் பார்த்ததும் பலருக்கு சீனாவில் இருக்கும் தி கிரேட் ஃபயர்வால் ஞாபகத்துக்கு வரக் கூடும். ஆனால் ரஷ்யா நடைமுறைப்படுத்த நினைக்கும் விஷயம் என்பது முற்றிலும் வேறு விதமானது. சீனாவின் கிரேட் ஃபயர்வால் இணையத்தில் இருக்கும் விஷயங்களை சென்ஸார் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரஷ்யாவோ முற்றிலும் புதிய இணையத்தைக் கட்டமைக்க விரும்புகிறது. தனி இணையத்தை ரஷ்யா முயற்சி செய்து வருவதாகப் பல வருடங்களாகவே கூறப்பட்டு வந்தது. அதற்காகப் பல்வேறு சோதனைகளையும் அவ்வப்போது நடத்தி வந்தது. எடுத்துக்காட்டாக கடந்த 2015-ம் ஆண்டு உலக இணையத்திலிருந்து ரஷ்யாவை மட்டும் தனியாகத் துண்டித்து பரிசோதனை செய்து பார்த்தது. பல கட்டங்களாக நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பின்னர் ரஷ்யன் இன்டெர்நெட் சட்டத்தை ('Runet' law) கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. ஒருவேளை இது நடைமுறைக்கு வந்தால் இணையம் முழுவதுமே அரசின் கையில்தான் இருக்கும்.

மக்களிடம் என்னென்ன விஷயங்கள் போய்ச் சேர வெண்டும் என்பதை அரசே முடிவு செய்யும் என்பது போன்ற காரணங்களால்தான் மக்கள் இதற்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அரசு இந்தச் சட்டத்தினை அமல்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த மாதம் ரஷ்ய பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் எற்றுக் கொள்ளப்பட்டது. அதை எதிர்த்துப் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. மேலும் பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நாட்டு மக்களிடம் கருத்துக் கேட்க அரசு முடிவு செய்தது. அதன் பின்னர் எடுக்கப்பட சர்வேயில் வெறும் 23 சதவிகிதம் பேர் மட்டுமே அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அரசு இந்தச் சட்டத்தினை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த வாரம் அதற்கு அனுமதியளித்து கையொப்பமிட்டிருக்கிறார் அதிபர் புதின். இது உலகம் முழுவதிலும் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

ரஷ்யாவின் முடிவுக்கு என்ன காரணம் ?

நிலையான, பாதுகாப்பான மற்றும் முழுமையாக இயங்கக் கூடிய உள்நாட்டு இணையக் கட்டமைப்பை உருவாக்குவது' என்பதுதான் இந்தச் சட்டத்தின் மூலமாக ரஷ்யா செய்து முடிக்க நினைக்கும் விஷயமாக இருக்கிறது. இது வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்தில் உள்ள நடைமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 2021-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்க வேண்டும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்படும் இணையத்தின் ஒட்டு மொத்தக் கட்டுப்பாடும் ரஷ்யாவின் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான Roskomnadzor-ன் கையில் கொடுக்கப்படும். இதன் மூலமாக இணையம் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலமாகக் கருத்துரிமையை அரசு ஒடுக்க நினைப்பதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் இது சீனாவின் கிரேட் ஃபயர்வால் அமைப்பு அளவுக்குக் கடுமையானதாக இருக்காது என்றே கூறப்படுகிறது. ஆனால் அதை ரஷ்ய மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதே நேரம் தனியாக Domain Name System என்பதை உருவாக்க வேண்டும், மேலும் இன்டெர்நெட் சேவை அளிப்பவர்கள் இதற்காகக் புதிய கருவிகளையும் நிறுவ வேண்டியிருக்கும் என்பதாலும், இதற்காகப் பல நூறு கோடி ரூபாய் அளவுக்குப் பணம் தேவைப்படலாம் என்பதாலும் தனி இணையம் சாத்தியமில்லாத ஒன்று எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஒரு தனி இணையக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இது வரை எந்த நாடும் இதற்கு முன்பு ஈடுபட்டதில்லை. இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் அது  டிஜிட்டல் உலகின் வல்லரசாக ரஷ்யாவை அடையாளம் காட்டும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.