ஒரு தன்னம்பிக்கையாளனின் கதை!!

திருச்சி மாவட்டம், சேத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் என்கிற விஜி.
எளிமையான கிராமத்து இளைஞரான விஜிக்கு எழுத்தின் மேல் தீராத ஆர்வம். மிகப்பெரும் பாடலாசிரியராக வரவேண்டும் என்கிற கனவோடு காலேஜ் படிப்பை மேற்கொண்டு வந்தார் விஜி. விதியின் சதியால், 2010 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக விஜி சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். லாரி ஒன்றில் மோதி வீசியெறியப்பட்ட விஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும்,முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணாமாக அவரது இரண்டு கால்களும், கைகளும் செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். விஜியின் தந்தை பெரியசாமி தென்னை மர குத்தகையில் ஈடுபட்டு வந்த விவசாயி ஆவார். மகனுக்கு ஏற்பட்ட ஊனம், பெரியசாமியை பெரிதும் பாதித்தது. மகனின் கவலையிலேயே அழுந்தி பெரியசாமி காலமானார்.

இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. இந்த ஒன்பது வருடங்களில் கை, கால் செயல்பாட்டை இழந்து விஜி சந்தித்த பிரச்னைகள் பல. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய வயதில், தன் அம்மா பழனியம்மாளுக்கு பாரமாக இருப்பதாய் நினைத்து வருந்துகிறார் விஜி. பழனியம்மாள்தான் விஜியின் ஒரே துணை. அரசு நடத்தும் தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிவரும் பழனியம்மாளுக்கு ஒரு நாள் கூலி ரூபாய் 200, அதுவும் மாதத்துக்கு 10 முதல் 14 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சொற்ப தினக்கூலியை வைத்தே பழனியம்மாளும் விஜியும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் விஜியின் கால்களைக் குணப்படுத்த மேற்கொண்டு மருத்துவம் பார்க்க இயலவில்லை.
விஜியின் கை விரல்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதைக்கொண்டே போனில் தட்டச்சு செய்து பல பாடல்களை இயற்றியுள்ளார். தனது விடாமுயற்சியின் மூலம், 'விருட்சமாகும் சிறு விதை' மற்றும் 'மனங்கொத்தி' என்னும் இரு கவிதைப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் விஜி. இதுமட்டுமல்லாது காற்றின் மொழி திரைப்படக் குழுவினர் நடத்திய பாடல் எழுதும் போட்டியில், 700க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் முதல் சுற்றுக்குத் தேர்வான 66 பேரில் விஜியும் ஒருவர்.
ஆச்சரியக் குறியும்
கேள்விக் குறியும்
நீயே !!
புள்ளியாவாயோ
ரூபமாவாயோ??
இங்கே
ரணங்களுக்கும்
துரோகங்களுக்கும்
வலிகளுக்கும்
வேதனைகளுக்கும்
புனையப் படுவது
உன் பெயர் தான் !!
வழிகளுக்கு நீயே
சுயம் !!
சுயமாவதும்
சுணக்கமாவதும்
உன்னூடே !!
- விஜி எழுதிய ஒரு கவிதை...
கடந்த ஆண்டு, விஜியைப் போல ஊனமுற்ற நண்பர் ஒருவர் பிஸியோதெரப்பி சிகிச்சை எடுத்துக்கொண்டதன் மூலம் மீண்டும் நடக்கும் வாய்ப்பைப் பெற்றதை அறிந்த விஜி, தனக்கும் இது சாத்தியமா என்கிற கேள்வியோடு கேரளாவில் உள்ள அந்த மருத்துவமனைக்கு தன்னுடைய மருத்துவ பரிசோதனை முடிவுகளை அனுப்பிவைத்தார். விஜியின் மருத்துவ அறிக்கையைப் பார்வையிட்ட மருத்துவர்கள், விஜிக்கு தொடர்ந்து ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சை வழங்குவதன் மூலம் தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை குணமாக்க முடியும் எனக் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அங்கு தங்கவேண்டியுள்ளதால், மருத்துவ சிகிச்சைக்கு மொத்தமாக ரூபாய் 5 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
மிகப்பெரிய எழுத்தாளர் ஆகவேண்டும் என்கிற கனவோடு வாழ்ந்து வரும் விஜி, தனக்கு ஏற்பட்டுள்ள ஊனத்தைக் கண்டு துவண்டுவிடாமல் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இப்போது தன்னுடைய கால்கள் குணமாக ஒரு வாய்ப்புள்ளது எனும் செய்தி கிடைத்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தோடு காணப்படுகிறார். மீண்டும் இரு புத்தகங்களுக்கு உண்டான கவிதைகளை எழுதி அதனை முடிக்கும் தருவாயில் இருக்கிறார் விஜி. "சென்றமுறை என் புத்தகங்கள் சென்னையில் வெளிவந்தபோது, கை கால் இயலாமை காரணமாக என்னால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. சிகிச்சைக்குப் பணம் கிடைத்து நான் குணமடைந்தால், இம்முறை புத்தகம் வெளியிடும்போது என் அம்மாவையும் உடன் அழைத்துச் செல்வேன்!" என்கிறார் விஜி
Powered by Blogger.