மோடி ஆட்சிக்கு வந்தால் ராகுல்தான் பொறுப்பு: கெஜ்ரிவால்!!

எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் காந்தி கேடு விளைவிப்பதாகவும், நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பு எனவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போன நிலையில், டெல்லி முதல்வரும் ஆத் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும், கேரளாவில் இடதுசாரிகளுக்கும், மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சி கேடு விளைவிக்கிறது. மத்தியில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பு. நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை எதிர்க்காமல் மற்ற எதிர்க்கட்சிகளை எதிர்த்து போட்டியிடுவதுபோல தெரிகிறது. மற்ற எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் வகையில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. முக்கிய துறைகளில் மோடி அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. அதனால்தான் போலி தேசியவாதத்தை அவர் தற்போது கையிலெடுத்துள்ளார். மோடியின் தேசியவாதம் போலியானது. அது நாட்டிற்கு ஆபத்தானதும் கூட. மோடி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வேலையும் செய்யவில்லை என்பதால் பாதுகாப்பு படைகளை பயன்படுத்தி வாக்குகளை பெற முயற்சிக்கிறார். மோடியை விட மன்மோகன் சிங் ஆயிரம் மடங்கு மேலானவர். நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் மீண்டும் அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுப்பதே எங்களது ஒரே நோக்கம். இவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கு வேண்டுமென்றாலும் நாங்கள் ஆதரவளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.