விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்குத் தடை!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத், தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை வெளியிட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி இணைந்து நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் போட்டிக்கு பல படங்கள் வெளியாவதால் படத்தை ஜூன் மாதத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
அதே போல் தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்தப் படத்தின் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருந்த மேகா ஆகாஷ் தற்போது பல படங்களில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்டப் படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் படத்துக்கும் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிந்துபாத், எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை தமிழில் வெளியிட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.இந்த நிறுவனமானது பாகுபலி முதல், இரண்டாம் பாகங்களை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். அப்போது பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்நிறுவனம் ரூ. 17.60 கோடி பாக்கி வைத்துள்ளது.
இதையடுத்து பாகுபலி திரைப்பட தயாரிப்பு நிறுவனமானது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில், கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை திருப்பித் தராமல், கே புரொடக்ஷன்ஸ் மற்ற படங்களை வெளியிடத் தடை கோரியது.
அதன்படி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை வெளியிட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
.
கருத்துகள் இல்லை