ஐபிஎல்: அனுபவமா, ஆக்ரோஷமா?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோத உள்ள அணி எது என்பது இன்று (மே 10) விசாகப் பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் தெரிந்துவிடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதும் இந்த ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரை மற்ற எந்த அணிகளையும் விட தொடர் வெற்றிகளில் தொடங்கியது சென்னை அணி தான். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை அதிகளவில் கொண்டுள்ள சென்னை அணி ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் இறுதி நேரத்தில் சில தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் இருப்பினும் வெற்றிக்கு தோனியை நம்பியே இருக்கவேண்டிய சூழல் உள்ளது. அது கடைசியாக நடைபெற்ற ப்ளே ஆப் போட்டியிலும் வெளிப்பட்டது. தோனிக்கு அடுத்து ரெய்னா சில போட்டிகளில் கை கொடுத்தாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் திணறுவது பின்னால் வரும் வீரர்களுக்கு சங்கடத்தை உருவாக்குகிறது. ஒப்பனிங் சரியாக அமையும் பட்சத்தில் சென்னை அணி வலுவான ஸ்கோரை பதிவு செய்யமுடியும்.
சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பு அணிக்கு பெரும் பலம்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னையும், டெல்லியும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் 14 போட்டிகளில் சென்னை அணியே வெற்றிபெற்றுள்ளது. நாக் அவுட் போட்டி ஒன்றிலும் சென்னையே வென்றுள்ளது. நடப்பு தொடரில் இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னைக்கே வெற்றி வசமானது.
இந்த புள்ளிக் கணக்குகள் சென்னைக்கு நம்பிக்கை அளித்தாலும் டெல்லி அணி இளம் வீரர்களை அதிகளவில் கொண்டு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஷிகர் தவண் (503 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (450 ரன்கள்), ரிஷாப் பந்த் (450 ரன்கள்), பிரித்வி ஷா (348 ரன்கள்) ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால் சென்னை அணியில் அதிகபட்சமாக தோனி 405 ரன்களை அடித்துள்ளார். ஹைதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்விக்கான வாய்ப்புகளே அதிகளவில் இருந்த நிலையில் ரிஷப் பந்த் அதிரடியால் டெல்லி அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனால் எந்த நிலையிலும் போராடி மீள்வது அந்த அணிக்கு இருக்கும் பலமாக உள்ளது.
இருபது ஓவர்களுக்குள் ஒட்டுமொத்த திறமையையும் நிரூபித்து இறுதிப் போட்டிக்குள் நுழைய அனுபவம் கைகொடுக்குமா, ஆக்ரோஷம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை