
வேலூர் மக்களவைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டிருந்தார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். இதற்கிடையே துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த வருமான வரி சோதனையைக் குறிப்பிட்டு தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு வேலூர் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இதனையடுத்து வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இருவரும் தனித் தனியாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். வரும் 19ஆம் தேதிக்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழகத்தில் வாக்குப் பதிவின்போது குளறுபடிகள் நடந்ததாகக் கூறி 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வேலூர் தேர்தல் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
இந்த சூழ்நிலையில் சென்னையில் இன்று (மே 10) செய்தியாளர்களிடம் பேசிய சத்திய பிரதா சாஹு, “வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து எங்களுக்கு தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை. அதனால் அங்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடியவுள்ள சூழலில், அதற்குள் வேலூருக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது இதன் மூலமாக தெரியவந்துள்ளது.
மறுவாக்குப் பதிவு தொடர்பாக பேசிய சாஹு, “பரிந்துரை செய்யப்பட்ட 46 வாக்குச் சாவடிகளில் 43 வாக்குச் சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்படாது. மீதமுள்ள 3 வாக்குச் சாவடிகளுக்கும், ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட 10 வாக்குச்சாவடிகளுக்கும் வரும் 19ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும். மறுவாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்” என்று தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை அன்று அசம்பாவிதங்களை தடுக்க தமிழகம் முழுவதும் மூன்று கம்பெனி துணை ராணுவப் படையினரை கோரியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை