மெல்லப் பேசு ..!! மின்னல் மலரே....!! பாகம் 3.!!


என் பாலைவனத்தில் சோலையாய் வந்த மாமழை நீ..!


கைவேலையாக இருந்தவள், மகனின் முனகல் ஒலி கேட்டதும் அவசரமாய் அவனுக்காக தயாராக வைத்திருந்த பால் புட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே விரைந்தாள். படுக்கையில் புரண்டபடி தாயின் கிழிந்த சட்டையை இறுக அணைத்து விளையாடிக்கொண்டிருந்தான் அவளது மைந்தன்.

“அனந்துக்குட்டி......பப்பு குடிக்கிறீங்களா?”  

என அவனது மொழியிலேயே செல்லம் கொஞ்சியபடி மகனருகில் அமர்ந்து, அவனை அள்ளி அணைத்து மடியில் வைத்துக்கொண்டாள். அவளது மார்பில் முகம் புதைத்த குழந்தை, தாய், தன்னை விட்டுச் சென்ற கோபத்தை தனக்கான மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.


அவனது தலையைத் தடவி உச்சியில் முத்தமழை பொழிந்தாள் கனிமொழி. அந்தக் கணத்தில் அவள் இந்த உலகத்திலேயே இல்லை. தனக்கும் மகனுக்குமாக ஒரு  உலகத்தை சிருஸ்டித்து அதில் இருவரும் லயித்துக் கொண்டிருந்தனர். அனந்திதன், கடவுள் தனக்காக கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் என எண்ணினாள் கனிமொழி.

தேநீரைக் குடித்துமுடித்த வெற்றி, வெற்று குவளையுடன் எழுந்து வெளியே வந்தான். நிமிர்ந்து பார்த்த தந்தையிடம், குவளையை காட்டினான்.

 ‘வைக்கப் போகிறானாம்‘
 தலையை ஆட்டிவிட்டு மறுபுறம் திரும்பி, சிரித்துக் கொண்டார் அவனது தந்தையார். காதலின் கள்ளத்தனங்களை அறியாதவரா அவர்? மனைவி குந்தவையை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். நொடிக்கு நொடி அவரைக் காதலித்து வாழ்ந்தவர்.


ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் தனிமை கிட்டாது லேசில். அந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கணவனும் மனைவியிடம் பேச கள்ளத்தனங்களை செய்வது வழமைதானே. காலம் அவரது மனைவியை விரைவாகப் பறித்துக்கொண்டபோதும் இன்றுவரை நினைவுகளில் அந்தக்காதலைப் பூஜித்துக் கொண்டிருப்பவர். மகனின் எண்ணம் புரிந்தவராய் சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டார்.


சத்தமில்லாமல் சமையலறையில் நுழைந்தான் வெற்றி. அங்கே யாரையும் காணாததால் அதனோடு ஒட்டி போடப்பட்டிருந்த சிறிய அறைக்குள் எட்டிப் பார்த்தான். மூக்கோடு மூக்கை உரசி தாயும் மகனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இருவரும் தமக்கான ஒரு உலகத்தில் சஞ்சரித்துவிட்டிருந்தனர். தன் சின்ன விரல்களால் தாயின் முடியை அளைந்து அவளது முகமெங்கும் தன் உதடுகளால் அடையாளமிட்டுக் கொண்டிருந்தான் அனந்திதன்.

பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை வெற்றிக்கு, இருவரையும் சேர்த்து அணைத்துக்கொள்ளவேண்டும் போல பரபரத்த கரங்களை பின்புறம் கட்டிக்கொண்டான். இருள் பிரிந்தும் பிரியாத அந்த காலைப்பொழுதில், மெல்லிய மின்னொளியில் இருவரது முகமும் பிரகாசமாய் ஜொலித்தது. அந்தக் காட்சியைப் படம் பிடித்துக்கொண்டவன்,  இனிமேலும் அங்கே நின்றால் தானே தன்னைக் காட்டிக்கொடுத்து விடுவேன் என நினைத்து சத்தமின்றி வெளியே வந்தான்.

"எப்படி?,  இவ்வளவு ஆனந்தமாக இருக்கமுடிகிறது இவளால்?, 

அவளது அந்த உலகத்தில் தானும் மகனும் மட்டும்தானா?, ஏன் அவனைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறாள், அவர்களின் உலகத்தில் ஒரு சின்ன இடமேனும் கிடைத்தால் போதுமென்றுதானே அவன் நினைக்கிறான்.


மனதைக் கல்லாக்கிவிட்ட அவளிடம் எப்படி விளக்கப்போகிறான்? அதற்காக விட்டுவிட முடியுமா, விட்டுவிட்டு வேறொருத்தியுடன்  வாழத்தான் அவனால் முடியுமா,? அந்தப் பாறையைப் பிளந்து அதில் வேர்விட்டுவிடவேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அப்படி செய்யாவிட்டால் அவன் வெற்றி அல்லவே. இந்தக் கல்லுக்குள் ஈரம் இல்லாமலாபோய்விடும்?‘

ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.