மலேசிய சிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் !

இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்தியதில் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமூக வலைதளங்கள் மனிதர்கள் இணைந்து இருப்பதற்காகவும் தங்களின் மனதில் இருக்கும் விஷயங்களைப் பகிர்வதற்கும் ஒரு தளமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் அது வளர்ச்சி அடைய அடையைச் சிலர் அதை தவறான வழிகளிலும் பயன்படுத்தினர். பலர் மன ரீதியாக சில பிரச்னைகளையும் சந்தித்தனர். இதுபோன்ற பல விஷயங்களை நாம் செய்திகளில் படித்திருப்போம்.

இன்றைய சூழலில் மொபைல் போன்கள் சிறுவர் சிறுமிகளிடமும் சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. சிலர் இதைப் புதிய தேடல்களுக்காக பயன்படுத்திக்கொண்டாலும் பலர் இதை ஒரு பொழுதுபோக்காகதான் பார்க்கின்றனர். இந்த நிலையில், மலேசியாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போடுகிறார். அதாவது தன்னை அதில் பின் தொடர்பவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். அதில், ``இது உண்மையிலே மிக முக்கியமானது. இதில் ஒன்றைத் தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா..?” என  வோட்டிங் முறையில் கேள்வி கேட்கிறார்.

நண்பர்கள் இப்படிக் கேட்கும்போது நம்மில் பலர் நகைச்சுவையாக கலாய்க்கும் விதமாகவும் நெகட்டிவ் பதில்களை அளிப்போம். அப்படிதான் பலர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பின் நடக்க இருக்கும் சம்பவத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுமார் 69% பேர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்ய, அந்தச் சிறுமி தற்கொலை செய்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் மலேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் சிங், ``நெட்டிசன்கள் அவருக்கு பாசிட்டிவ் வழியைக் காட்டியிருந்தால் ஒருவேளை அப்பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நடந்துள்ளது. இந்த நாட்டில் தற்கொலை என்பது குற்றம் என்பதால், அதற்குத் தூண்டுதலாக இருந்து வாக்களித்தவர்களும் குற்றவாளிகள்தான். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்” என்றார்.

மலேசியாவின் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சர் சயீத் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ``நாட்டு மக்களின் மனநிலை குறித்து உண்மையில் கவலைகொள்கிறேன். இது ஒரு தேசிய பிரச்னை. நிச்சயம் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.

மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் அதிகாரி ஒருவர், ``எங்களின் பிரார்த்தனைகள் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருடன் இருக்கும். இன்ஸ்டாகிராமை மக்கள் பயன்படுத்தும்போது பாதுகாப்பானதாக மக்கள் உணர்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். எங்களின் முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பும் தேவை. யாருக்காவது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவைக் கண்டால் உடனடியாக ரிப்போர்ட் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்றார்.

இன்ஸ்டாகிராம் வாக்குமூலம் சிறுமி எடுத்த தற்கொலை முடிவு மலேசியா மட்டுமல்லாது அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.