யாருமற்ற நகரில் பறக்கும் கொடியின் கொடு நிழல்

சனங்கள் தம் காலடிகளையும்
எடுத்துச் செல்ல
கடல் நகரத்திலும் அசைந்தன
ஆக்கிரமிப்பின் கொடிகள்

அலைச்சலால் ஆன கால்களை
பிடுங்கும் எறிகனைகளில்
காயமுற்ற  கடல் நகரம்
பெருங் கையுள் சுருங்கிப்போனது.

கோவலன் கூத்தாடிய நகரத்தில்
திமிறி நிறைந்தன
படைகளின் வெற்றிக் கூச்சல்கள்.

யாருமற்ற நகரின் தெருவில்
தவித்து திரியும் நாயின்
எச்சிலின் வெம்மையில் பெருந்தவிப்பு

யாவற்றையும் தின்று பறக்கிற
கொடியின் நிழலில்
பசித்தலைந்தான் சிங்க அரசன்
அழிந்த நகரத்தின் அடியில்
புதைகிறது கடல் வாழ்வு.

நிலம் இருள
சூரியன்  கரைந்திற்று
பழமையான கிழக்குக் கடலில்

உடைந்த சுவர்களினையும்
நினைவுகள் எழுதப்பட்ட கற்களையும்
தின்று முன்னேறுகிறது
பசித்தலையும் கொடியின் நிழல்.

வற்றாப்பளை அம்மனும்
அகதி ஆனாள்.

பண்டார வன்னியனே
ஒருபொழுதும் வீழா நகரத்தின்
வெற்றுத் தெருக்களையே
அவர்கள் கைப்பற்றினர்.

வன்னி அரசனே
யாருமற்ற நகரில்
பறக்கும் கொடியின்
கொடு நிழலில்
தோல்வியின் முகத்தை
நீ காண்டாய்.
0

தீபச்செல்வன்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.