மெல்லப் பேசு..!மின்னல் மலரே..!! பாகம்9

“என் மூச்சுக் காற்றுக்குள் உன்னைச் சுவாசிக்கிறேன் உனக்குப் புரிகிறதா பெண்ணே?”
அவன் வீட்டிற்கு வந்தபோது அப்பாவிற்கு கஞ்சி பருக்கிக்கொண்டிருந்தாள் கனிமொழி. அவன்,  தானே செய்வதாகச் சொன்னதும் அவனிடம் தந்துவிட்டுச் சென்றவள், சற்று நேரத்தில் சுடச்சுட ஆவி பறந்த தேநீருடன் வந்து நின்றாள். அப்பாவிற்கு உணவைக் கொடுத்துமுடித்துவிட்டு  தேநீர் கப்பை வாங்குவதற்காக நிமிர்ந்தவன், அதிர்ந்து போனான், அவனது கற்பனையில் வந்து சென்ற அதே குழந்தை, அவளது கைகளில், ஆச்சரியத்தில் அவனுக்கு பேச்சுவரவில்லை. அவளை முதல் முதலில் இந்த வீட்டில் பார்தபோது அதிர்ந்தது போலவே அவளது குழந்தையைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றான். 

அப்பாவை அவள் கவனித்துக்கொண்ட விதம், வெற்றிக்குள் அவள் மீதிருந்த அன்பை இன்னும் அதிகப்படுத்தியிருந்தது என்றால் அவனது பிள்ளை என அவன் கற்பனையில் கண்ட குழந்தையை அவளிடம் கண்டதும் அவனுக்குள் உரிமை உணர்வு அதிகமாய் தலைதூக்கியது. இதுவரை அவளைத்தேடி, அவளது கணவன் வரவில்லையே, அவளும் போகவில்லை, அப்படி ஏதும் நடந்திருந்தால் அப்பா சொல்லியிருப்பாரே, அப்படியென்றால்.......எண்ணங்கள் பலவிதமாய் ஆடிக்களித்தது, சில விதிமுறைகளையும் மீறி.  

அப்பாவின் அருகில் இருந்து அவரது தேவைகளைக் கவனித்துக் கொண்டான் வெற்றி. தங்கை பாடினியும் அடிக்கடி முகம் பார்த்து அப்பாவிடம் கதைத்துக் கொண்டாள். அவனது போனில் அவளும் அடிக்கடி அழைப்பு எடுத்ததால் அவளது குழந்தையை, மீண்டும் ஒரு தடவை பார்க்கவேண்டும் என்ற அவனது ஆசை, மனதிற்குள்ளேயே இருந்தது. 'காய்ச்சல் குழந்தைக்கு வந்தாலும்; அவனைக் கொண்டுவராதே' என்று அப்பாதான் வெற்றி வந்த அன்று காலையிலேயே கனியிடம் சொல்லி இருந்தார். அது அவனுக்கும் தெரியும். அதனால் அவளும் மகனைக் கொண்டுவரவில்லை. 
அவன் வந்து இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. அப்பாவும் ஓரளவு குணமாகியிருந்தார். மாலை உணவு தயாரிப்பதில் மும்முரமாய் இருந்த கனிமொழி, மகன் அழுவதைக் கேட்டதும், சமையலறையில் இருந்தபடியே, மகனுக்கு பராக்கு காட்டிக்கொண்டிருந்தாள். 'இப்ப, இப்ப வந்திடுவன் செல்லம், என் அனந்துக்குட்டி நல்ல பிள்ளையாம், சத்தம்போடாம இருப்பானாம், யாரும் இல்லை என்ற எண்ணத்தில் மகனோடு கதைபேசிக்கொண்டிருந்தாள்.  குழந்தையை விட சத்தமாக அவளது குரல் கேட்கவே எட்டிப்பார்த்தான் வெற்றி. 

படுக்கையில் இருந்தபடி, அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டதும் அவசரமாய் உள்ளே சென்று கைகளில் அள்ளிக்கொண்டான். அவனது உடலெங்கும் ஒருவித மின்சாரம் பாய்ந்த உணர்வு. அப்போதுதான் குளிக்கவைத்து, அலங்காரம் செய்திருக்கவேண்டும். பவுடர் வாசனையும், அதைத்தாண்டிய வேறொரு வாசனையும் இதமாக வெளிப்பட்டது குழந்தையிடம் இருந்து. 

குழந்தையின் வாசனையை உணர்ந்தறியாத வெற்றிக்கு  அது புதுவித அனுபவமாக இருந்தது. கொழுகொழுவென்ற கன்னங்களுடன் அவனைப் பார்த்ததும் பொக்கைவாய் திறந்து சிரித்த குழந்தையை இரண்டு கைகளாலும் அணைத்தபடி தூக்கி முகம் எங்கும், கழுத்து வளைவெங்கும் முத்தமிட்டான். குழந்தையை மார்போடணைத்து ஒரு தந்தையின் பேரின்பத்தை அவ்வேளை உணர்ந்தறிந்தான் வெற்றிமாறன்.  
‘கனி என்னவள், அவள் எனக்கானவள், இது நம் குழந்தை,‘  இதே எண்ணம் தான் அவனுக்குள் பற்றிப் படர்ந்தது. 

குழந்தையின் சத்தம் நின்றுபோனதால் என்னவோ ஏதோ என்று ஓடிவந்த கனிமொழி, அந்தக் காட்சியைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள். ‘குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் போல‘ என எண்ணிக்கொண்டு உதட்டில் அரும்பிய புன்னகையுடன் மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள். 
அதன் பின்னர் இருவரும் அப்பப்ப பேசிக் கொண்டனர். வெற்றிக்கு, அதுவே பெரிய வரமானது, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான், குழந்தை அனந்திதன் கூட உடனேயே தன்னிடம் ஒட்டிக்கொண்டது அவனுக்கு இரட்டிப்பு சந்தோசம். 

கோபிகை
ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.