மெல்லப் பேசு ....மின்னல் மலரே....!! பாகம் 10

எம் ஊடலும் 
அதன் பின்னான கூடலும் 
ஏதேதோ சொல்கிறதே
கண்டுகொள் கண்மணி!!


நாட்களின் நகர்வில், அடிக்கடி ஊருக்கு வரத்தொடங்கி, அவளோடு பேசத்தொடங்க, அவளோ,  தேவைக்கு அதிகமாய் ஒரு வார்த்தைகூட பேசாது, அவனைத் தள்ளிவைப்பதிலேயே குறியாக இருந்தாள்.

‘என்னசெய்து, எப்படி அவளிடம் பேசுவது‘ என குழம்பியிருந்தவனை அவள் சொன்ன ஒரு சொல், அதிகமாய் கோபப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் அனந்திதனுக்காக ஏதாவது ஒன்றை வாங்கி வருபவன், அந்த தடவை, அவனுக்காக அதிகமான விளையாட்டுப் பொருட்களை வாங்கி வந்திருந்தான்.
தான் கொண்டுவந்தவற்றை எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு வருவதற்காக அவளது இருப்பிடம் சென்றபோது,

 “எதுக்கு இத்தனை பொருட்கள்,?” என்றவள், “எவ்வளவு என்று சொல்லுங்கோ, காசைத் தந்துவிடுறன்,” என்றாள். 
வெற்றிக்கு ஒருநாளும் இல்லாத கோபம் வந்து தொலைத்தது.

 “அதிலயே விலை எல்லாம் இருக்கு, கூட்டிப்பாத்து கொண்டவந்து தாங்கோ” 
என்றுவிட்டு விரைந்துவெளியே வந்துவிட்டான். 

அதன் பின்னர் அவள் செய்த சாப்பாட்டை அவன் சாப்பிடவில்லை. நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் என்று தந்தைக்குச் சொல்லிவிட்டு, வெளியேயே சாப்பிட்டுவிட்டு வந்தான்.

குழந்தை அனந்திகனைக்கூட அவன் பார்க்கச் செல்லவுமில்லை, தூக்கவும் இல்லை. அன்று முழுவதும் அவனது செயற்பாடுகள் விசித்திரமாய் இருக்க,  தான் காலையில் சொன்னதன் விளைவே அது என்பதை உணர்ந்தவளுக்கு ஏனோ மனம் வலித்தது.
'பாவம்...ரொம்ப கவலைப்படுகிறாரோ, அப்படிச் சொல்லியிருக்கக்கூடாதோ,
 ‘என்ன இருந்தாலும் அவளுக்கு ஆதரவு தந்த பெரியவரின் மகன் அவன், அவனிடம் அப்படிச் சொன்னது தவறோ?‘ தன்னைத்தானே கேள்விகேட்டு ஓய்ந்துபோனாள் கனிமொழி.

மறுநாளும் அவள் தேநீர் கொண்டு சென்றுவைக்க, அவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான். 
சற்று நேரத்தில் அறையைக் கூட்டுவது போல சென்று பார்த்தவளுக்கு துக்கம் பொங்கியது. 

காலைத்தேநீர் அப்படியே இருப்பதைக் கண்டவள், இனியும் மௌனமாக இருப்பது தவறு என எண்ணி, வெளியே மரத்தடியில் இருந்தவனுக்கு அவன் அருகில், சென்றபோது, அவன், விருட்டென்று எழுந்து சென்றுவிட்டது அவளுக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.

மனம் கனக்க தனது அறைக்குள் சென்று பேசாமல் அமர்ந்திருந்தாள். எந்தப் பிரச்சினைக்கும்  உடைந்துநிற்பது தீர்வல்ல, என நினைப்பவள் அவள், அதி உச்ச துயரங்களைத் தவிர வேறு எப்போதும் ஓய்ந்துபோகாதவள், வெற்றிமாறனின் முகம் திருப்பலுக்காக உடைந்துவிட்டாளே, அவளுக்கே அவளது செயற்பாடு புதிராக இருந்தது. இரண்டு நாட்கள் இந்த மௌனநாடகம் தொடர்ந்த்து இருவருக்கும்.


அன்று, மாலை வரையிலும் வீட்டில் இருக்கவில்லை வெற்றி. ‘போய்விட்டானோ,‘ என நினைத்து அவள், பயந்து கொண்டிருக்க, படலை திறந்து வந்தவனைக் கண்டதும் ‘அப்பாடா‘  என்றிருந்தது அவளுக்கு, மாலையில் தோட்டத்தில் உலாவுவது அவனது வழமை, அன்றும் அவன் தோட்டத்திற்குச் செல்ல மகனையும் தூக்கிக்கொண்டு பின்னோடு சென்றாள்.

மணற்பிட்டியில் அமர்ந்திருந்த வெற்றிமாறனின் அருகில் குழந்தையை இறக்கிவிட்டாள், எங்கோ பார்த்தபடி இருந்த வெற்றி, மெல்ல நகர்ந்தே அருகில் வந்த அனந்திதனைக் கண்டதும் அவசரமாய் எட்டித்துாக்கி மடியில் வைத்துக்கொண்டே, நிமிர்ந்து பார்த்தான். 
செதுக்கிவைத்த சிலையென சற்றுத்தள்ளி, நின்றுகொண்டிருந்த கனியைக் கண்டதும், மனம் கனிந்தது அவனுக்கு.  
ஓரக்கண்ணால் பார்த்தான். அவளும் பாராதது போல அவனைத்தான் பார்த்தாள். வேண்டுமென்றே, “என்னடா, உங்க அம்மா இன்னும் காசை கணக்குப் பாத்து தரவில்லை?  எனக்கு செலவுக்கு காசே இல்லை, காலையில சாப்பாட்டுக்கு கூட என்ன பண்றது எண்டே தெரியேல்ல, கெதியில தரச்சொல்லு கண்ணா” என்றான். 

அவள் மௌனமாக நிற்கவே, அவளைக் கூர்ந்து பார்த்தான். மனம் தனக்குத்தானே பேசிக்கொண்டது. 
“பாவி...பாவி.....எதுக்காக இப்பிடி தள்ளித்தள்ளியே போறாய், என்னை எப்பதான் புரிஞ்சுகொள்ளப்போறாய்,?”
அவன் பேசியது கேட்டதோ என்னவோ அருகில் வந்தவள், “மன்னிச்சிடுங்கோ” என்றாள். 
“எதுக்கு?” விட்டேற்றியாய் கேட்டான் வெற்றி. 

“நேற்று அப்பிடி சொல்லியிருக்கக்கூடாது, அதுக்காக இப்பிடி சாப்பிடாம, இவனைக்கூட துாக்காம” மேலே பேசமுடியாது, தொண்டையை அடைத்தது அவளுக்கு. 

“சரி ....சரி.... நானும் அப்பிடி கோபப்பட்டிருக்ககூடாது, அதுக்காக வருத்தப்படாதேங்கோ....” இவனும் இறங்கி வந்தான்.

குழந்தை இருவரையும் வேடிக்கை பார்த்தது. மடியில் இருந்த அனந்திதனை இறுக்கமாய் அணைத்துக்கொண்ட வெற்றி, “மன்னிச்சிடுடா கண்ணா, உங்க அம்மாவில உள்ள கோபத்தில உன்னைக்கூட துாக்காம விட்டதுக்கு, ஆனா, கோபம் என்றதைவிட எனக்கு ரொம்ப வருத்தம் தான், உனக்கு ஏதாவது வாங்கித் தர்றதைக்கூட நான் செய்யக்கூடாதாடா? அந்த அளவுக்கு நான் அந்நியனா?”  குரலில் வலியோடு அவன் கேட்டதும் கனிமொழிக்கு உயிருக்குள் வலித்தது. தவிப்போடு அவனைப் பார்த்தாள். இருள் சூழ்ந்த அந்தப் பொழுதில் வெற்றி அவள்  விழிகளுக்குள்  எதையோ தேடினான்.

தலைகவிழ்ந்துகொண்ட அவள், “அப்ப, நான் சமைச்சா இனி சாப்பிடுவீங்கள்தானே” சிறு பெண்போல மகிழ்ச்சியுடன் கேட்டாள். 
“ஓமோம்.....”

வெற்றி வெற்றிக்களிப்பில் இருந்தான். சண்டையிட்ட கணவனும் மனைவியும் பிள்ளையைவைத்து சமாதானமாகிவிடுவதுபோல இருந்தது அவர்களின் சமாதானமும். கனிமொழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். ஏனோ தெரியவில்லை, அவள் இன்னொருவன் மனைவி என்ற எண்ணமோ அவளை நேசிப்பது தவறு என்றோ அவனுக்குத் தோன்றவில்லை. ‘தன்னை உண்மையாய் நேசிக்கும் ஒருவனைவிட்டு அவள் ஏன் வரப்போகிறாள்?‘

அவனைப் பொறுத்தவரை அது அவனது குடும்பம்தான், இருள் மெலிதாகப் பரவிய அந்தப் பொழுதில், அவனது அந்த ஆழமான குறுகுறுவென்ற பார்வை அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மணற்பிட்டியைக் காட்டி அமரச் சொன்னான்.

அவள் பேசாமலே நின்றாள், கைதொட்டுவிடும் துாரத்தில் நின்ற அவள், தன் தலைகோதி, மடி சாய்த்துவிடமாட்டாளா என ஏங்கியது அவனது மனம்.
“இல்லை, வேலை இருக்கு, நான் போறன், இவன் உங்களோட இருக்கட்டும்” எனச்சென்றுவிட்டாள்.

தலையை ஆட்டினான் வெற்றி. ‘மகாராணி இதில எல்லாம் ரொம்ப கெட்டிக்காரி,‘ மனதில் உவகை பொங்க தனக்குள் சொல்லிக்கொண்டவன், அவளது தலைமறைந்துவிட்டதா எனப் பார்த்துவிட்டு  ”ரொம்பத்தான் திமிருடா அம்மாவுக்கு, ஆனா, உன்னோட அப்பா அதைவிட பிடிவாதமானவன் எண்டு அவளுக்கு இப்ப தெரிஞ்சிருக்கும்” என்றான் குழந்தையிடம். 

எதுவும் புரியாதபோதும், குழந்தையும் அவனது கழுத்தை இறுக்கமாய் கட்டிக்கொண்டு சிரித்தான்.

தொடரும்....
கோபிகை.

ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.