உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்!

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை எதிர்கொள்ள வேண்டும். முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
உலகக் கோப்பைத் தொடருக்கான வீரர்களை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன. உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் 22ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இத்தொடர் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பங்கேற்கும் அணிகளின் நிறை குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மின்னம்பலத்தில் தொடராகக் காண்போம்.
தென்னாப்பிரிக்கா அணி
கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி எப்போதுமே பலம் வாய்ந்த அணியாகவே இருந்துவருகிறது. இருப்பினும் உலகக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகளில் அந்த அணியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இந்த துரதிர்ஷ்டம் அந்த அணியைத் துரத்தி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பலம்வாய்ந்த அணியாக உள்ள தென்னாப்பிரிக்கா இதுவரையில் ஒருமுறைகூட உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே, இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அணியை ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் ஒயிட் வாஸ் செய்து வெற்றிபெற்ற சூட்டோடு உலகக் கோப்பைத் தொடரைத் தென்னாப்பிரிக்க அணி எதிர்நோக்கியுள்ளது.
அணியின் பலம்
தென்னாப்பிரிக்க அணியின் பலமே அதன் பந்துவீச்சுதான். காகிசோ ரபாடாவின் தலைமையில் டேல் ஸ்டெய்ன், லுங்கி ஏங்கிடி, ஆண்டிலே பிலாவேக்யோ ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுழல் மன்னன் இம்ரான் தாஹிரும் எதிரணியின் பேட்டிங் ஆர்டர்களைத் தகர்க்கக் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை (26) வீழ்த்திய இம்ரான் தாஹிர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ரபடா மற்றும் ஸ்டெய்ன் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு முழு உடல் தகுதியுடன் இருப்பதால் அந்த அணியின் பந்துவீச்சு மற்ற அணிகளை விட பலமானதாக இருக்கிறது.
பலவீனம்
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான குயிண்டான் டிகாக் தனது அதிரடி ஆட்டத்தை இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய அவர் அந்த அணியின் ரன் குவிப்புக்குப் பெரிதும் உதவினார். இருப்பினும் இத்தொடரில் டிகாக்குடன் எந்த வீரரைத் தொடக்க வீரராகக் களமிறக்குவது என்ற கேள்வி இருக்கிறது. ஹசிம் ஆம்லா ஃபார்மில் இல்லாததால் அவருக்குப் பதிலாக எய்டன் மார்க்ரமைக் களமிறக்கவும் வாய்ப்புள்ளது.
அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும். அவரது இடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பு கேப்டன் டூபிளசிஸுக்கு உள்ளது. புதுமுக வீரரான வாண்டர் டூசன் தான் விளையாடிய ஒன்பது போட்டிகளில் சராசரியாக 88.25 ரன்கள் குவித்துள்ளார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல, காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள டூமினியும் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். மொத்தத்தில் மற்ற பெரிய அணிகளுடன் ஒப்பிடும்போது தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாகவே உள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமும் பயிற்சியும் டூபிளசிஸ், ரபடா, தாஹிர், டிகாக் ஆகியோருக்கு இருந்தாலும் இவர்களை மட்டுமே நம்பி அந்த அணியால் களமிறங்க இயலாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.