மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள சூழலில், அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார்தான். தேனி தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.


பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. இதுதொடர்பான கேள்வி நேற்று அதிமுக, பாஜக என இரு தரப்பினர் மத்தியிலும் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ரவீந்திரநாத் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்வார் என்று கூறியிருந்தார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 24) செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத் குமார், “பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் உதயகுமார் ஆகியோருக்கும் எனது வெற்றிக்காக பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி. தேனி தொகுதியில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க பாடுபடுவேன்” என்றார்.
அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா என்ற கேள்விக்கு, “அதுபோன்ற கனவுகள் எனக்குக் கிடையாது. அதிமுகவை வழிநடத்திக்கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்” என்றார். மேலும், “தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அதிமுக பெருவாரியான வாக்கு சதவிகிதத்தை பெற்றிருக்கிறது. எனவே இதனை தோல்வியாகக் கருதமுடியாது” என்றும் கூறினார்.
அமைச்சர் பதவிக்கான கனவு இல்லை என்று கூறினாலும் பன்னீர்செல்வம் தரப்பு ரவீந்திரநாத்துக்காக கப்பல் போக்குவரத்துத் துறையை பெறும் முனைப்பில் இருக்கிறதாம். இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
மோடி பேரணிக்காக பன்னீர்செல்வம் வாரணாசி சென்றபோதே இதுதொடர்பான சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அதிமுகவில் வேறு சிலர் வெற்றிபெற்றிருந்தால் அமைச்சர் பதவிக்கு அவர்கள் மல்லுக்கு நிற்கலாம் என்ற நிலை மாறி, தற்போது ரவீந்திரநாத் அமைச்சர் பதவி பெறுவதற்கு எந்தவித போட்டியுமே அதிமுகவில் இல்லை. கூட்டணி தர்மத்தில் அடிப்படையில் பாஜக ஒதுக்கும் அமைச்சர் பதவி தனது மகனுக்கு கிடைக்கும் என்று பன்னீர்செல்வம் உறுதியாக நம்புகிறார்.
இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்தார். இந்தத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதால் அவர் அமைச்சரவையில் இடம்பெறுவது கேள்விக் குறியாகியுள்ளது. எனவே பொன்.ராதாகிருஷ்ணன் வகித்துவந்த கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொறுப்பை ரவீந்திரநாத்துக்காக கேட்கக்கூடும் என்கிறார்கள் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.