மெல்லப் பேசு ....மின்னல் மலரே....! பாகம் 14!!

காலம் எனக்களித்த 
கற்பகம் நீ என்பேன்.
காலமது உன்னுறவை 
கனவாக மாற்றிடுமோ?


வழமைக்கு மாறான வெளிச்சம் கண்ணில் படவே மெல்ல கண்களைத் திறந்தாள் கனிமொழி, உடலெங்கும் ஒருவித வலி ஆட்கொண்டது. எதிரே இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள், நேரம் எட்டு நாற்பதைக் காட்டியது, கண்களைக் கசக்கியபடி நன்றாக உற்றுப் பார்த்தாள். ஆமாம் எட்டு நாற்பதுதான். அருகில் கையை வைத்துப் பார்த்தாள், மகனைக் காணவில்லை, எழும்ப முடியாமல் இருந்தது, இவ்வளவு நேரமா துாங்கியிருக்கிறேன், தனக்குள் கேட்டுக்கொண்டவள், எழுந்துகொள்ள முயன்றாள். 

“எதுக்கு இப்பிடி அவசரமா எழும்பணும், நான் தான் அனந்துவை துாக்கிட்டுப் போனன்,” என்றபடி வந்த வெற்றியைக் கண்டதும் அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட, “எப்ப” என்றாள்.

“ராத்திரியே துாக்கிப்போயிட்டன்,” என்றான்.

“ராத்திரியேவா? ”
“ம்ம்....வலியில்லாம நித்திரை கொள்ளத்தானே மருந்து தந்தது, அதனால் நீங்கள் நல்ல நித்திரை, அழுது சத்தம் கேட்டது, அப்பவே உள்ள வந்து பாத்தன், அனந்து எழும்பியிருந்தான், துாக்கிட்டுப் போய்வைச்சிருந்தன், அப்பா, பால் கலந்து தந்தார், குடுத்தேன், குடிச்சிட்டு மடியிலயே நித்திரை, அப்பிடியே ஆளை எனக்குப் பக்கத்திலயே படுக்க வைச்சிட்டன், இப்ப அப்பாவோட விளையாடிட்டிருக்கிறான்,” என்றபடி கையிலிருந்த கப்பை நீட்டினான்.  

“என்னதிது?” என்றவளிடம்,

“ரீதான்”  என்றான்.

“எனக்கா? யார் போட்டது?”

“ஏன், யார் போட்டது எண்டு சொன்னாத்தான், குடிப்பீங்களோ? நான் தான் போட்டன், குடியுங்கோ,” என்றான்.

“இல்ல,”  என்றபடி எழுந்துகொள்ள முயன்றவள், தட்டுத்தடுமாறி அமர்ந்துகொண்டாள். அவசரமாய் அருகில் வந்த வெற்றிமாறன்,
“சொன்னா கேக்கவேணும், உடம்பு ரொம்ப சோர்வா இருக்கு, இதைக்குடிச்சிட்டுப் படுங்கோ,“ என்றான். 

அவளுக்கும் அதுதான் சரியென்று தோன்றிவிட, பேசாமல் அதைக்குடித்துவிட்டுப் படுத்துவிட்டாள்.

“கனி” என்றபடி அருகில் வந்தவன், “ஏதாவது சாப்பிட்டுப் படுங்களன்,” என்றான்.

உடம்பு இயலாது எனக்கெஞ்ச, “கொஞ்ச நேரம் போனதும் சாப்பிடுறன்,” என்றுவிட்டு அப்படியே உறங்கிவிட்டாள்.

காலையில் அனந்திதனை தந்தையிடம் கொடுத்துவிட்டு, காலை உணவையும் கடையிலிருந்து எடுத்துவந்து கொடுத்துவிட்டு அவசரமாய் வெளியே செல்ல ஆயத்மாகிக்கொண்டிருந்தான் வெற்றி.
 “கனிமொழி....கனிமொழி ......”

வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டதும் வெளியே எட்டிப் பார்த்தான் வெற்றி. குடும்பநல உத்தியோகத்தர் மாது நின்றுகொண்டிருந்தார்.

“உள்ள வாங்கோ,” என்றபடியே உள்ளே சென்றவன், “அப்பா...யாரென்று பாருங்கள்,”  என்றான்.

தந்தையாருக்குத் தெரியும் போல, “வாம்மா...” என்றபடி வெளியே சென்றவர், அவர்,  அனந்திதனின் பதிவிற்காக வந்துள்ளார் என்பதை அறிந்துகொண்டு, “வெற்றி ..”.எனக்குரல் கொடுத்தார்.

“என்னப்பா...” என்றபடி வந்தவனை நன்றாகப் பார்த்த அந்த மாது, “உங்கள் மகனா அப்பா?” என்றார்.
“ஓமோம்.....” என்றவரிடம், “நான் இதுவரைக்கும் இவரைக் காணவே இல்லையே?”  என்றதும்
“அவர் இஞ்ச இருக்கிறேல்ல, இப்ப சில நாளாத்தான் லீவு எடுத்துக்கொண்டு வந்து நிக்கிறான்,”  என்றார்.
“எங்க அப்பா கனியைக் காணேல்ல,?” என்ற அந்த மாதுவிடம்,

 “இரவு கனிமொழிக்கு தேள் கடிச்சிட்டுது, பிறகு தம்பிதான் ரவுணுக்கு கொண்டுபோய் வந்தவன், நல்ல காலம் விசம் ஏறமுன்னம் கொண்டுபோட்டம், ஆளுக்கு ஏலாது, ஒரே படுக்கை தான்,” என்றவர், வெற்றியிடம், திரும்பி,

 “அந்த கிளினிக் கொப்பியாம் , ஒருக்கா கனியிட்ட கேட்டு எடுத்துக் குடு” என்றார். 

அவன் அவசரமாக உள்ளே சென்றதையும், அவளுடைய சின்ன அலுமாரியில் தேடி அதனை எடுத்துவந்ததையும் உன்னிப்பாக பார்த்துக்கொண்ட அவர், பதிவுகளை முடித்துவிட்டு,

“அப்பா, கனிமொழி பாவம் அப்பா, அவளுக்கெண்டு ஒருத்தரும் இல்ல, இந்த குழந்தையும் தானும் தான், உலகம் எண்டு நினைக்கிறா, அவளுக்கெண்டு ஒரு வாழ்க்கை வேணும்தானே,” என்றதும்

“நாங்களும் அதைத்தான் சொல்லுறம், எங்க அவ யோசிக்கிறா இல்ல. பாப்பம், கடவுள் கருணை காட்டினா எல்லாம் நல்லதா நடக்கும், இந்த வருசம் நல்லது நடக்கும் எண்டுதான் என்ர மனசு சொல்லுது, பாப்பம், ” என்றார். 


தொடரும்

கோபிகை.

ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.