அயர்லாந்து அணியை துவம்சம் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் தற்போது அயர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இத்தொடரில் நேற்று முதல் போட்டியாக நடைபெற்ற போட்டியொன்றில், மேற்கிந்திய தீவுகள் அணியும், அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜோன் கெம்பல் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் அணிக்காக சிறந்ததொரு ஆரம்ப துடுப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்ப துடுப்பாட்ட இணைப்பட்டமாக 365 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். இதுவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆரம்ப விக்கெட்டுக்காக பெற்றுக்கொண்ட அதி சிறந்த இணைப்பாட்டமாகும். இதற்கு முன்னதாக சிம்பாப்வே அணிக்கெதிராக பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பகர் சமான் மற்றம் இமாம் உல் ஹக் ஆகியோர் 304 ஓட்டங்களை பெற்றிருந்ததே சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. இதனை நேற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தகர்த்தெறிந்தனர். இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், ஓட்டுமொத்த துடுப்பாட்ட வரிசையின்படி, பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சிறந்த இணைப்பாட்டமாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிராக கிறிஸ் கெய்ல் மற்றும் மார்லன் சமுவேல்ஸ் ஆகியோர் 372 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டதே சிறந்த இணைப்பாட்டமாக உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி இப்போட்டியில், 47.2 ஓவரில் 365 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஜோன் கெம்பல் 179 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்து வெளியேற அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் சாய் ஹோப்பும் 170 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து களம் புகுந்த டேரன் பிராவோ 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களமிறக்க, இறுதிபந்தில் 1 ஓட்டத்துடன் ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழந்தார். இதேவேளை, இந்த போட்டியில், ஜோன் கெம்பல் மற்றும் சாய் ஹோப் தனது சிறந்த ஒருநாள் அதிகபட்ச ஓட்டத்தை பதிவுசெய்தனர். இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதுவே மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவுசெய்த இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிராக 389 ஓட்டங்கள் பெற்றதே சிறந்த ஓட்ட எண்ணிக்கையாகவுள்ளது. இதனைதொடர்ந்து, 382 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 34.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இதன்போது அயர்லாந்து அணி சார்பில், கெவீன் ஓ பிரையன் 68 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ஆஷ்லி நெர்ஸ் 4 விக்கெட்டுகளையும், செனோன் கெப்ரியல் 3 விக்கெட்டுகளையும், கெமார் ரோச் 2 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 137 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 15 பவுண்ரிகள் அடங்களாக 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோன் கெம்பல் தெரிவுசெய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.