ஐ.பி.எல்.: வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது பஞ்சாப் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில், முதலில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 96 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் சேம் கர்ரன் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைதொடர்ந்து, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 18 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவுசெய்தது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக லோகேஷ் ராகுல் 71 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரான் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக வெற்றிக்கு துணைநின்ற பஞ்சாப் அணியின் வீரர் லோகேஷ் ராகுல் தெரிவுசெய்யப்பட்டார். தனது 100ஆவது வெற்றியை சென்னை அணி பதிவுசெய்ய தவறி விட்டாலும், அந்த அணி பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. மறுபுறம் பஞ்சாப் அணி, தனது இறுதிப் போட்டியில் வெற்றியை பதிவுசெய்த மகிழ்ச்சியோடு தொடரிலிருந்து வெளியேறியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.