ஸ்டாலின் நடத்தும் நாடகம்: தமிழிசை!!

தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது திமுகதான் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், அடுத்த 25 வருடங்களில் ஸ்டாலின் இந்திய குடியரசுத் தலைவர் ஆவதற்குக் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் மூன்றாவது அணி தொடர்பாக ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக தரப்பு மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழிசை.

சென்னை விமான நிலையத்தில் இன்று (மே 8) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் நாடகம் ஆடி பார்த்திருக்கிறேன். சந்திரசேகர ராவை சந்திக்க மறுத்துள்ளதன் மூலம் தற்போது தேசிய அரசியலிலும் நாடகம் ஆடியுள்ளார். மேலும் ஸ்டாலின் அடுத்த 25 வருடத்தில் ஜனாதிபதி ஆவார் என்று துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் தீவிர அரசியலில் இருக்கும் ஒருவரை பிரதமர் ஆவார் என்று கூறாமல் ஜனாதிபதிதான் ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த கட்சியினர் கலாய்த்தது போக இப்போது சொந்தக் கட்சியினரே காலைப் பிடித்து இழுத்துவிடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்ததே திமுகதான் என்று குற்றம்சாட்டிய தமிழிசை, “மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்ததை தடுத்ததே திமுகதான். அப்துல் கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவதை தடுத்ததும் திமுகதான். எனவே தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு திமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. திமுகவின் பழைய கதைகளை தோண்டினால் ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்திற்குக் கூட செல்ல முடியாது” என்று விமர்சித்தார்.

பலர் எனக்கு ஆறுதல் சொல்வதாக கூறுகிறார்கள் என்று கமலைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “இவர்கள் மக்களை சந்திக்காதவர்கள். நான் துணிச்சலாக சென்று மக்களை சந்தித்தேன். தேர்தலில் மக்களை சந்திக்காதவர்கள், சந்திக்க பயந்தவர்கள்தான் என்னுடைய வெற்றியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எனக்கு ஆதரவு தந்திருப்பதால், தூத்துக்குடியில் நான் வெற்றிபெறுவேன்” என்று பதிலளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.